

இஷ்ரத் ஜஹான் என்கவுன்டர் வழக்கு விவரங்களை சிபிஐ-யிடம் மத்திய அரசு கேட்டுள்ளது தேவையற்றது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
தீவிரவாதிகள் என்ற சந்தே கத்தின் பேரில், 19 வயது பெண் இஷ்ரத் ஜஹான், ஜாவித் குலாம் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜீஷன் ஜோஹர் ஆகிய நான்கு பேரையும் மும்பை அருகே குஜராத் போலீஸார் என்கவுன்டர் நடத்தி கொன்றனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் சிறப்பு இயக்குநர் ராஜீந்தர் குமார், பி.மிட்டல், எம்.கே.சின்ஹா, ராஜீவ் வாங்கடே ஆகிய அதிகாரிகள் மீது வழக்கு தொடர, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சிபிஐ முன் அனுமதி கோரியுள்ளது.
இந்த விவகாரத்தில் சிபிஐ-க்கும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. அதிகாரிகள் மீது வழக்கு தொடர முன் அனுமதி வழங்க வேண்டும் என்றால், இந்த வழக்கின் விசாரணை விவர ஆவணத்தை வழங்க வேண்டும். அதைப் பரிசீலித்த பின்பே, முன் அனுமதி வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாக தெரிகிறது.
விசாரணை விவர கோப்பு என்பது நீதிமன்றத்தில் மட்டுமே காண்பிக்கப்பட வேண்டியது என்பதால் சிபிஐ அதை வழங்க தயக்கம் காட்டி வருகிறது. இந்த விஷயத்தில் சட்ட ஆலோசனை பெற சிபிஐ முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறுகையில்: ‘இஷ்ரத் ஜஹான் வழக்கில் விசாரணை விவர ஆவணத்தை மத்திய அரசு கேட்டுள்ள செயல் தேவையற்றது. இது சிபிஐ-யின் சுதந்திரத்தில் தலையிடும் செயல்’ என்றார்.