

கேரளாவில் 2-வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட் டுள்ளது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மற்றும் திரைப்பட பிரமுகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. கேரளாவில் மே 16-ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. இதை முன்னிட்டு முதல் வேட்பாளர்கள் பட்டியலை இந்த மாத தொடக்கத்தில் பாஜக வெளியிட்டது. அதில் 22 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் 51 பெயர்கள் கொண்ட 2-வது வேட்பாளர் பட்டியலை பாஜக மேலிடம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மற்றும் திரையுல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் டெல்லி வந்த ஸ்ரீசாந்த், பாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்துப் பேசினார். அதன்பின் அவர் கூறுகையில், ‘‘பாஜக உறுப்பினராக ஒப்புக் கொண்டேன். கேரளாவில் பாஜக.வை பலப்படுத்த என்னால் முடிந்த பணிகளை செய்வேன்’’ என்றார்.
திருவனந்தபுரம் தொகுதியில் ஸ்ரீசாந்த் போட்டியிடுகிறார். தவிர நடிகர் பீமன் ரகு, பத்தனாபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் தற்போது நடிகர் கே.பி.கணேஷ்குமார் எம்எல்ஏ.வாக இருக்கிறார். ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இருந்து இப்போது எதிர்க்கட்சியான இடதுசாரி பக்கம் வந்துள்ள இவர் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் பிரபல நகைச்சுவை நடிகர் ஜகதீஷ் போட்டியிடுகிறார். இதனால் பத்தனாபுரம் தொகுதியில் நடிகர்களுக்குள் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
அத்துடன் திரைப்பட இயக்குநர் ராஜசேனன் நெடுமங்காடு தொகுதியிலும், கொடுவலி தொகுதியில் இயக்குநர் அலி அக்பரும் பாஜக வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் தொகுதி தற்போது காங்கிரஸ் வசம் உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநில சுகாதாரத் துறை அமைச்சருமான வி.எஸ்.சிவகுமார் இந்த தொகுதி எம்எல்ஏ.வாக இருக்கிறார். இவர் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை இடதுசாரி இன்னும் அறிவிக்கவில்லை.
கேரள சட்டப்பேரவைக்கு பாஜக சார்பில் இதுவரை ஒரு எம்எல்ஏ கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த தேர்தலில் புதிய கணக்கை தொடங்க பாஜக தீவிரமாக உள்ளது. எனினும், மேட்ச் பிக்சிங் வழக்கில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டவர் ஸ்ரீசாந்த். இவரை வேட்பாளராக பாஜக தேர்ந்தெடுத்துள்ளது குறிப் பிடத்தக்கது.