Published : 31 Dec 2021 07:47 AM
Last Updated : 31 Dec 2021 07:47 AM

செய்தித்தாள் நிறுவனங்களின் ‘இ-பேப்பர்களை’ பிடிஎஃப் வடிவில் சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக்கள் முடக்கம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி

செய்தித்தாள் நிறுவனங்களின் இ-பேப்பர்களை அனுமதியின்றி பிடிஎஃப் வடிவில் சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக்களை முடக்க டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் செய்தி நிறுவனங்கள் தங்களின் அன்றாட இ-பேப்பர்கள், புத்தகங்களை வாசகர்களுக்கு பயனளிக்கும் விதமாக தங்களின்அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் பிரசுரித்து வருகின்றன. ஆனால் சிலர் செய்தி நிறுவனங்களின் அனுமதியின்றி அந்நிறுவனஇ-பேப்பர்களையும், புத்தகங்களையும் சட்டவிரோதமாக டவுன்லோடு செய்து பிடிஎஃப் வடிவில் மாற்றி தங்களின் வாட்ஸ்அப் குழுக்களில் பகிருகின்றனர்.

இதை எதிர்த்து, இந்தியில் வெளியாகும் ‘டெய்னிக் பாஸ்கர்’ என்ற பிரபல நாளிதழ் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், ‘‘எங்களது ‘டெய்னிக் பாஸ்கர் கார்ப்பரேஷன் லிமிட்டெட்’ நிறுவனத்துக்கு சொந்தமாக டெய்னிக் பாஸ்கர், திவ்யா பாஸ்கர், திவ்யா மராத்தி, பாஸ்கர் குரூப் ஆகிய பெயர்களில் வணிக முத்திரைகள் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 80-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் தங்களின் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதள குழுக்களில் எங்களது நாளிதழ்களின் இ-பேப்பர்களை சட்டவிரோதமாக பிடிஎஃப்வடிவில் பகிர்ந்து வருவதால் எங்களுக்கு வணிக ரீதியில் இழப்புஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் வாட்ஸ்அப் குழுக்களை முடக்கவும், ஏற்கெனவே பகிரப்பட்ட இ-பேப்பர்களை நீக்கவும் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜிவ் நரூலா பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘பதிப்புரிமைச் சட்டம் மற்றும் வணிக முத்திரைகள் சட்டம் பிரகாரம் தனி நபர்கள், செய்தித்தாள் நிறுவனங்களின் வெளியீடுகளை எவ்வித முன் அனுமதியும் பெறாமல் பகிரவோ அல்லது டவுன்லோடு செய்வதோ சட்டப்படிகுற்றம். மனுதாரரான ‘டெய்னிக் பாஸ்கர்’ நிறுவனத்தின் அனுமதியின்றி அதற்குச் சொந்தமான இ-பேப்பர்கள் மற்றும் புத்தகங்களை பிடிஎஃப் வடிவில் வாட்ஸ்அப்உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிருவது சட்டவிரோதம்.

எனவே மனுதாரரின் இ-பேப்பர்களை பரப்பும் 80-க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களை நீக்கவோ அல்லது முடக்கவோ வாட்ஸ்அப் நிறுவனம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் மே 2-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

முன்மாதிரி உத்தரவு

இந்த உத்தரவு குறித்து சென்னைஉயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் கூறும்போது, ‘‘மாறிவரும் நவீன டிஜிட்டல் யுகத்தில் இந்திய இதழியல் வளர்ச்சி என்பது அசுர வளர்ச்சி கண்டுள்ளது. தினசரி நாளேடுகள் பலதரப்பட்ட வாசகர்களையும் கவரும் வகையில் பிரத்யேக யுக்திகளைக் கையாண்டு வருகின்றன. கரோனாகாலகட்டம் என்பதால் நாளிதழ்களின் இ-பேப்பர்களுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பதிப்புரிமைச் சட்டம் 1957பிரகாரம் செய்தித்தாள் நிறுவனங்களின் அனுமதி பெறாமல் அவற்றின் படைப்புகளை அப்படியே மறுஉருவாக்கம் செய்வதோ அல்லதுபிடிஎஃப் வடிவில் பிறருக்கு பகிருவதோ சட்டவிரோதம். அதேநேரம் அந்நிறுவனங்களின் அனுமதியுடன் ஆய்வுக்காகவோ அல்லது தனிப்பட்ட படிப்புக்காகவோ, மதிப்பீட்டுக்காகவோ சில பகுதிகளை அல்லது பிரசுரங்களை நியாயமான வழியில்பயன்படுத்த சட்டம் அனுமதிக்கிறது.

எம்.புருஷோத்தமன்

செய்தித்தாள் நிறுவனத்தின் அனுமதி பெறாமல் அவற்றின் பதிப்புகளைப் பயன்படுத்தினால் அந்நிறுவனங்கள் மிகப்பெரிய வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்பதால் இதுதொடர்பாக ‘டெய்னிக் பாஸ்கர்’ நாளிதழ் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, மற்ற நாளிதழ்களுக்கும் பொருந்தும் வகையிலான முன்மாதிரி உத்தர வாக இருக்கும்’’ என்றார்.

7 ஆண்டுகள் சிறை தண்டனை

சைபர் கிரைம் உயர் அதிகாரி கூறும்போது, “நாளிதழ்களின் பிடிஎஃப் பக்கங்களை பரப்புபவர்கள் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் காப்புரிமை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். இந்த சட்டத்தின் கீழ் உடனடியாக கைது நடவடிக்கையும் எடுக்க முடியும். அவர்கள் செய்த குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மேலும், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப சிறப்புச் சட்டத்தின் கீழ், குண்டர் சட்டத்தில்கூட கைது செய்ய முடியும்.

நாளிதழ்களின் பிடிஎஃப் பக்கங்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது மாநகர காவல் ஆணையரகங்களில் உள்ள மத்தியகுற்றப்பிரிவு அலுவலகத்திலோ, அல்லது மாவட்ட எஸ்பி அலுவலகங்களிலோ புகார் அளிக்கலாம். சமூக வலைதளங்களில் தகவல் பரப்புபவர்களை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியும். ஆதாரங்களும் உடனே கிடைத்துவிடும். எனவே, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x