Last Updated : 24 Mar, 2016 09:07 AM

 

Published : 24 Mar 2016 09:07 AM
Last Updated : 24 Mar 2016 09:07 AM

கம்யூனிஸ்ட் கோட்டை மீண்டும் கைக்கு வருமா?- 2-வது முறை ஆட்சியை பிடிக்க மம்தா முயற்சி

அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள மாநிலங் களில் மேற்கு வங்கமும் ஒன்று. நாட்டின் கிழக்கில் அமைந்துள்ள முக்கியமான மாநிலமான இதன் மக்கள் தொகை 9.1 கோடி. மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளது.

வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இம்மாநிலத்தைச் சுற்றி, ஒடிசா, ஜார்க்கண்ட், பிகார், சிக்கிம், அசாம் ஆகிய மாநிலங்களும் மாநில எல்லைகளை பிரித்துக் கொள்கின்றன. வடக்கே இமய மலை அடிவாரம் வரை நீண்டுள்ள மேற்கு வங்கம் கிழக்கே வங்காள விரிகுடா கடலையும் பெற்றுள்ளது.

சுந்தர்பன், பக்சா புலிகள் சரணாலயம் உள்ளிட்ட 15 வனச் சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்களைக் கொண்டுள்ள மாநிலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. முழுக்க முழுக்க விவசாயத்தை ஆதாரமாக நம்பியுள்ள மேற்கு வங்கம் வளர்ச்சியைப் பொறுத்தமட்டில், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத்துக்கு அடுத்தபடியாக 6-வது இடத்தில் உள்ளது.

இங்குள்ள 19 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தமுள்ள தொகுதி களின் எண்ணிக்கை 294. அடுத்த மாதம் தேர்தலைச் சந்திக்கவுள்ள ஐந்து மாநிலங்களில் அதிக சட்ட மன்ற தொகுதிகளைக் கொண் டுள்ளதால், இந்த மாநில தேர்தல் மீது நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகளின் கவனம் திரும்பியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை என்று சொல்லுமளவுக்கு, மேற்குவங்கத் தில் 1977 முதல் 34 ஆண்டுகள் இடைவிடாது ஆட்சி செய்த அக்கட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து கடந்த 2011 தேர்தலில் ஆட்சியைப் பிடித்தார் மம்தா பானர்ஜி. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவியாக, எளிமை யின் உருவமாக உள்ள மம்தா வுக்கு இது 2-வது தேர்தல்.

இழந்த பெருமையைப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆவேசமாக களம் இறங்கியுள்ளதால் இத்தேர்தல் மம்தாவுக்கு ஒரு சவாலான தேர்தலாகவே அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மம்தா பானர்ஜிக்கு சவாலாக, அவரது கட்சியினர் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோ ஆதாரங்களை ஏற்க மறுத்துள்ள மம்தா, இவை எதிர்க்கட்சிகளின் சதி வேலை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். எனக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து களமிறங்கியுள்ளன என்று கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் வியூகத்தை உடைத்து மீண்டும் மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிப்பாரா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள மொத்தம் 294 தொகுதிகளுக்கும் ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 4-ம் தேதி 18 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி கடந்த திங்களன்று முடிவடைந்தது. இதையடுத்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி விட்டது.

தேர்தலை மறந்து ஹோலி கொண்டாட்டம்

கொல்கத்தாவில் தேர்தலை மறந்து அனைவரும் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்கள், குழந்தைகள் தங்கள் நண்பர்கள், உறவினர்களை வீடு தேடிச் சென்று சாயங்களைப் பூசியும், வண்ணக் கலவைகள் அடங்கிய சாய நீரைப் பீச்சியடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். முதல்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள் நடைபெறும் இடங்களில் இன்னும் அரசியல் கட்சியினரும் தங்கள் பணிகளை துவங்காமல் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x