பிஹார் போலி என்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு தூக்கு தண்டனை: போலீஸ் காவலர் உள்பட 7 பேருக்கு ஆயுள்

பிஹார் போலி என்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு தூக்கு தண்டனை: போலீஸ் காவலர் உள்பட 7 பேருக்கு ஆயுள்
Updated on
1 min read

பிஹார் மாநிலம் பாட்னாவில் 12 ஆண்டுகளுக்கு முன் 3 மாணவர்கள் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்ட வழக்கில், சாஸ்திரி நகர் காவல் நிலையத்தின் அப்போதைய ஸ்டேஷன் அதிகாரி ஷம்சே ஆலமுக்கு தூக்கு தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.

மேலும் போலீஸ் காவலர் அருண்குமார் சிங் உள்ளிட்ட 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஷம்சே ஆலமும், அருண்குமார் சிங்கும் கொலை குற்றவாளிகள் என, விரைவு நீதிமன்ற நீதிபதி ரவிசங்கர் சின்ஹா கடந்த 5-ம் தேதி அறிவித்தார். மேலும் வியாபாரிகள் 6 பேரை கொலை முயற்சி குற்றவாளிகளாக அவர் அறிவித்தார்.

சாஸ்திரி நகர், சம்மேளன் சந்தையின் வியாபாரிகளான இந்த 6 பேரும், கடந்த 2002 டிசம்பரில், விகாஸ் ரஞ்சன், பிரசாந்த் சிங், ஹிமான்ஷு சேகர் என்ற 3 மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

சந்தையில் எஸ்.டி.டி. பூத் ஒன்றில் கட்டணம் செலுத்துவது தொடர்பான வாக்குவாதம் முற்றியதில் இம்மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதையடுத்து தகவலின் பேரில் அருண்குமார் சிங்குடன் அங்கு வந்த ஷம்சே ஆலம் மாணவர்கள் 3 பேரையும் தலையில் சுட்டுக்கொன்றுள்ளார். இது தொடர்பான போலீஸ் அறிக்கையில் இம்மாணவர்கள் மூவரும் கொள்ளையர்கள் என்று கூறப்பட்டிருந்தது.

இவ்வழக்கு விசாரணையில் 33 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 2003-ல் ஆலம் கைது செய்யப்பட்டது முதல் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த வழக்கை முதலில் உள்ளூர் போலீஸாரும் பிறகு சிஐடி போலீஸாரும் விசாரித்தனர். இதன் பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in