Published : 30 Dec 2021 07:05 AM
Last Updated : 30 Dec 2021 07:05 AM

கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிப்பு

புதுடெல்லி

நாட்டில் ஒமைக்ரான் பாதிப்புநாளுக்கு நாள் உயர்ந்து வரும்நிலையில் கரோனாவால் பாதிக் கப்படுவோர் எண்ணிக்கையும் திடீரென உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 9,195 பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். கடந்த 19 நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 9 ஆயிரத்திற்கும் கீழ் இருந்தது. நேற்று மீண்டும் 9 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 2,172 பேருக்கு தொற்று உறுதியானது. கேரளாவில் 244 பேர் உள்பட மேலும் 302 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,80,592 ஆக அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 781-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 51, 292 ஆக உயர்ந்தது. தற்போது 77,002 பேர் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று 64,61,321 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 143 கோடியே 15 லட்சத்தை கடந்துள்ளது. இவ்வாறு புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆந்திராவில் ஒமைக்ரான்

ஆந்திர மாநிலத்தில் நாளுக்கு நாள் ஒமைக்ரான் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே விஜயநகரம், திருப்பதி உட்பட மேலும் சில ஊர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலம் 6 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குவைத், நைஜீரியா, அமெரிக்கா, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து அனந்தபூர், சித்தூர், கிழக்கு கோதாவரி, கர்னூல், மேற்கு கோதாவரி, மற்றும் குண்டூர் ஆகிய ஊர்களை சேர்ந்த 10 பேருக்கு ஒமைக்ரான் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஆந்திராவில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திராவில் 162 பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ள தாக மருத்துவ துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 31,743 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை நடத்தியதில் 162 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 186 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது ஆந்திராவில் மொத்தம் 1049 பேர் கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். - பிடிஐ

பிஹாரில் 3-வது அலை: முதல்வர் நிதிஷ் தகவல்

பாட்னா :இந்திய மருத்துவர் சங்கத்தின் 96-வது தேசிய மாநாடு, பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. மாநாட்டை முதல்வர் நிதிஷ் குமார் நேற்று முன்தினம் தொடங்கிவைத்து பேசியதாவது:

கரோனா பெருந்தொற்றின் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை பிஹாரை தாக்கியபோது மருத்துவர்கள் உயிரை பணயம் வைத்து அயராது உழைத்தனர். அவர்கள் எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவர்கள்.

பிஹாரில் கரோனா மூன்றாவது அலை ஏற்கெனவே தொடங்கிவிட்டதால் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய வழிகாட்டுதலின்படி மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்துவதில் சுகாதாரத் துறை மும்முரமாக உள்ளது.

பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 5,400-க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பிற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் படுக்கை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. புதிய துறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மருத்துவத் துறையினருக்கு பிஹார் அரசு முழு ஆதரவு அளிக்கும். மது அருந்துவதாலும் திறந்தவெளியில் மலம் கழிப்பதாலும் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து மக்களுக்கு மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமூகத்தில் தனித்துவமான அந்தஸ்தை மருத்துவர்கள் பெற்றுள்ளனர். விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றுவதால் அவர்களை மக்கள் கடவுளாக பார்க்கின்றனர். எனவே சமூகத் தீமைகளுக்கு எதிராக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மருத்துவர்கள் பங்களிக்க முடியும்.

இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x