Published : 29 Dec 2021 04:42 PM
Last Updated : 29 Dec 2021 04:42 PM

இந்தியாவில் கரோனா 3-வது அலை வர சாத்தியம் உள்ளதா?- வல்லுநர்கள் கருத்து

கோப்புப்படம்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த சில மாதங்களாகக் குறைந்து வந்த கரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. உலக அளவில் அச்சுறுத்தி வந்த ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பும் இந்தியாவில் மெல்ல அதிகரித்து வருகிறது.

டிசம்பர் 29-ம் தேதி (இன்று) நிலவரப்படி, கரோனா தொற்று 44 சதவீதம் திடீரென அதிகரித்துள்ளது. ஒமைக்ரான தொற்றும் அதிகரித்து வருவதைப் பார்த்தால் இந்தியாவில் 3-வது அலை வந்துவிடக்கூடிய சாத்தியம் இருக்குமா என்ற கேள்வி மக்களிடயே எழுகிறது.

தடுப்பூசிகளை மக்கள் செலுத்தத் தொடங்கியவுடன் கரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கின. தொற்று குறைந்தவுடன் மக்கள் வழக்கம் போல், முகக்கவசத்தை மறந்து, சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல், கைகழுவுதலைக் கைவிட்டு, பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்பியதும் கரோனா தொற்று அதிகரிக்கக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதைப் பார்த்தால் 3-வது அலைக்கான எச்சரிக்கையாக இருக்கிறது. ஆனால், முதல் மற்றும் 2-வது அலையில் இருந்த உயிரிழப்பு, தீவிர பாதிப்பு 3-வது அலையில் இருக்காது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தாலும், அதன் உறுதியான ஆதாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை.

3-வது அலை என்பது நீண்டகாலம் நீடிக்காது, சில நாட்களில் முடிந்துவிடும் என்று தெரிவிக்கும் வல்லுநர்கள், 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் 3-வது அலையை எதிர்பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

1. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கூற்றுப்படி, இந்தியாவில் கரோனா 3-வது அலை டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும என எச்சரித்துள்ளனர்.

2. கான்பூர் ஐஐடி ஆய்வின்படி, இந்தியாவில் 3-வது அலையின் உச்சம் பிப்ரவரி மாதத்தில் இருக்கும். டிசம்பர் மாதத்தின் 2-வது வாரத்தில் தொற்று அதிகரிக்கத் தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளனர்.

3. தேசிய கோவிட்-19 சூப்பர் மாடல் கமிட்டியின் ஆய்வின்படி, 3-வது அலை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எதிர்பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் டெல்டா வைரஸுக்கு பதிலாக ஒமைக்ரான் வைரஸ் வந்துவிட்டதால் வரும் நாட்களில் தொற்று படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.

4. தென் ஆப்பிரிக்க மருத்துவர் ஏஞ்செலிக் கோட்ஸிதான் முதன் முதலில் ஒமைக்ரான் வைரஸைக் கண்டுபிடித்தார். அவர் கூறுகையில், “இந்தியாவில் கரோனா தொற்று அதிகரிக்கும். குறிப்பாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும்போது பரவல் வேகமாக இருக்கும். அதிகமானோர் பாதிக்கப்படுவார்கள். ஆனால், மக்களுக்கு லேசான அளவில்தான் பாதிப்பு இருக்கும். தென் ஆப்பிரிக்காவில் இருந்தது போன்று தொற்றின் வீரியம் குறைவாகவே இருக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

5. உலக அளவில் பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் வைரஸால் 4-வது அலை தொடங்கிவிட்டது.

6. தென் ஆப்பிரிக்காவில் 4-வது அலை முடிந்துவிட்டது. இதனால் கடந்த சில நாட்களாக படிப்படியாக கரோனா தொற்று குறைந்து வருகிறது.

7. அமெரிக்கா, பிரிட்டனில் டெல்டா வகை வைரஸ்களுக்கு பதிலாக தற்போது ஒமைக்ரான் வேகமாகப் பரவி வருகிறது. தினசரி பாதிப்பும் ஒரு லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x