Published : 29 Dec 2021 01:20 PM
Last Updated : 29 Dec 2021 01:20 PM

பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூ.50-க்கு தரமான மது பாட்டில்: ஆந்திர பாஜக மாநிலத் தலைவர் வாக்குறுதி

அமராவதி : "ஆந்திர மாநிலத்தில் 2024-ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தால் தரமான மது வகைகளை விற்பனை செய்வோம், ஒரு பாட்டில் ரூ50-க்கு கிடக்கும் என்பதை உறுதியளிக்கிறேன்" என்று அம்மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு தெரிவித்துள்ளார்.

அமராவதியில் செவ்வாய்க்கிழமை பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, "ஆந்திராவில் ஏராளமான வளங்கள், நீண்ட கடற்கரை இருக்கின்றன, ஆனால், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசும், இதற்குமுன் ஆண்ட தெலுங்கு தேசம் கட்சியும் எதுவும் செய்யவில்லை.

ஆந்திராவி்ல் ஒரு கோடி பேர் மதுக் குடிக்கிறார்கள் அவர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைவரும் பாஜகவுக்கு வாக்களியுங்கள். நாங்கள் உங்களுக்கு ரூ.75-க்கு மதுவை விற்பனை செய்கிறோம். நல்ல வருவாய் கிடைத்தால், நாங்கள் உங்களுக்கு ஒரு பாட்டில் 50 ரூபாய்க்கு கூட கொடுக்கிறோம். நிச்சயமாக மது மோசமானதாக இருக்காது, தரமான மதுவாகத்தான் இருக்கும் என்பதை உறுதியளிக்கிறேன்.

ஆனால், ஆந்திாவில் தற்போது மதுவின் விலை அதிகபட்சமாக இருக்கிறது. ஆந்திராவில் மதுகுடிக்கும் ஒரு நபர் சராசரியாக மாதத்துக்கு ரூ.12,000 செலவு செய்கிறார். இந்த பணத்தை, மக்களிடம் ரத்தத்தை உறிஞ்சுவது போல் வசூலித்து, அதை பணத்தை நல்ல திட்டங்களாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்குகிறார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் அமராவதி நகரை தலைநகராக்கி, அடுத்த 3 ஆண்டுகளில் சிறப்பானதாக மாற்றுவோம். இடதுசாரிகள் நாட்டை அழித்துவிட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் குரைக்கும் நாய்கள்” என்றார் சோமு வீரராஜு.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், புரந்தேஸ்வரி, மாநிலங்களவை எம்.பி. ஒய்எஸ் சவுத்ரி, எம்சி ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x