Published : 29 Dec 2021 09:11 AM
Last Updated : 29 Dec 2021 09:11 AM

ம.பி.யில் பியூன், ஓட்டுநர், வாட்ச்மேன் உள்ளிட்ட 15 காலியிடங்களுக்கு விண்ணப்பித்த 11,000 பட்டதாரிகள்: பி.இ., எம்.பி.ஏ., சட்டம் படித்தோரும் அடக்கம்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் பியூன், ஓட்டுநர், வாட்ச்மேன் வேலைக்கு பி.இ., எம்பிஏ, சட்டம் படித்த பட்டதாரிகள் உள்பட 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. இந்தப் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தான் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் கூட பட்டதாரிகள் பலரும் விண்ணபித்துள்ளனர்.

இது குறித்து அஜய் பாகெல் கூறுகையில், "நான் அறிவியல் பட்டதாரி. பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன். இங்கே முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட இருக்கின்றனர்" என்றார். ஜிதேந்திர மவுரியா சட்டம் பயின்றவர். அவர் கூறுகையில், "நான் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்துள்ளேன். நீதிபதிகள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். இந்த வேலை கிடைத்தால் நான் புத்தகம் வாங்கவாவது பயன்படும். அதனால் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன்" என்று கூறினார்.

இந்த வேலைக்காக மத்தியப் பிரதேசம் மட்டுமல்ல உத்தரப் பிரதேசத்தில் இருந்தும் இளைஞர்கள் வந்துள்ளனர். அல்தாஃப் தான் உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்துள்ளதாகவும் பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறினார்.

இத்தனைக்கும் மொத்த காலிப்பணியிடங்கள் 15 தான். ஆனால் அதற்கு 11,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அண்மையில் ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான் பேசுகையில், "நாங்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்குவோம். காலிப்பணியிடங்களை நிரப்புவதில் சிறு சுணக்கம் கூட இல்லாமல் பார்த்துக் கொள்வோம். எல்லோருமே அரசு வேலை பெறவே விரும்புகின்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் அரசு வேலை கிடைக்கும் என உறுதியளிக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

ஆனால் கள நிலவரம் வேறாக உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் வேலை வாய்ப்பில்லாதோர் எண்ணிக்கை 32,57,136. பள்ளிக் கல்வித் துறையில் மட்டுமே 30,600 காலிப் பணியிடங்கள் உள்ளன. உள்துறையில் 9,388, சுகாதாரத் துறையில் 8,592, வருவாய்த் துறையில் 9,530 காலிப்பணியிடங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் அரசுத் துறையில் மட்டுமே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் அவற்றை நிரப்பினாலே வேலை வாய்ப்பு திண்டாட்டம் குறையும் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

அரசின் அலட்சியத்தால் தான் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குறைந்த சம்பள வேலைகளுக்காக குவிகின்றனர் எனக் கூறுகின்றனர்.
அண்மையில் தெரு வியாபாரிகளுக்கான அரசுத் திட்டத்தில் பயன்பெற 15 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 99,000 தேர்வானார்கள். அதில் 90% பேர் பட்டதாரிகள்.

இதனைக் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா, "இது 17 ஆண்டுகளாக சிவராஜ் சிங் ஆட்சி மாநிலத்திற்கு என்ன செய்தது என்பதற்கான சாட்சி. மாதம் ஒரு லட்சம் பேருக்கு வேலை என்று கூறிய தலைவர்கள் எங்கே? அவர்கள் வீதிக்கு வந்து நிலரவத்தைக் காணட்டும்" என்றார்.

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பின் ஆய்வின்படி மத்தியப் பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மை 1.7% எனக் கூறப்படுகிறது. ஆனால், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் ம.பி.யில் கடந்த ஆண்டு மட்டுமே 95 பேர் வேலைவாய்ப்பு இல்லாததால் தற்கொலை செய்து இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x