Last Updated : 29 Dec, 2021 06:14 AM

 

Published : 29 Dec 2021 06:14 AM
Last Updated : 29 Dec 2021 06:14 AM

தாய் மதத்துக்கு திரும்புதல் பிரச்சாரத்தின் மூலம் கர்நாடகாவில் இந்துவாக மாறிய கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த 9 பேர்: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட‌வர்கள்

பெங்களூரு

கர்நாடகாவில் ‘தாய் மதத்துக்கு திரும்புதல்' பிரச்சாரத்தின் வாயிலாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கிறிஸ்துவ‌ குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மீண்டும் இந்து மதத்துக்கே திரும்பியுள்ளனர்.

கர்நாடகாவில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்பினர், கிறிஸ்தவம், முஸ்லிம் உள்ளிட்ட மக்கள் மீண்டும் இந்து மதத்துக்கு திரும்புவதற்காக 'தாய் மதத்துக்கு திரும்புதல்' (கர் வாப்சி) எனும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்ற‌னர்.

கடந்த‌ நவ.28-ம் தேதி கார்வார்பகுதியில் பாஜக எம்பி அனந்த்குமார் ஹெக்டே தலைமையில் 5 கிறிஸ்தவ குடும்பங்களைச் சேர்ந்த23 பேர் இந்து மதத்துக்கு மாறியுள்ளனர். கடந்த வாரம் கர்நாடக அரசு மதமாற்ற தடை சட்ட மசோதா கொண்டு வந்துள்ள நிலையில், பாஜக எம்பி தேஜஸ்வி 'கிறிஸ்தவம், முஸ்லிம்களை மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பும் பணியில் கோயில்கள், மடங்கள் முழுமையான வேலைத் திட்டத்துடன் செயல்பட வேண்டும்' என பேசினார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற் றுக்கிழமை சிக்கமகளூருவில் உள்ள ஜன்னாபூரில் உள்ள ராமபஜன் மந்திரில் கிறிஸ்தவ குடும்பத்தை ஜெயசீலன், ஜெயமேரி, பிராபகன் உள்ளிட்ட 9 பேர் மீண்டும் இந்து மதத்துக்கு மாறியுள்ளனர். அந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களை மதமாற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பஜ்ரங்தளம் நிர்வாகிகள் பாராட்டப்பெற்று கவுரவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஜெயசீலன் (60)கூறும்போது, ''எனது குடும்பத்தினர் தமிழ்நாட்டில் உள்ள சேலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். எனது தந்தை ஏழுமலை சிக்கமங்களூருவில் உள்ள காபி தோட்டத்துக்கு வேலைக்கு வந்தார். 35 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை குடும்பத்துடன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்.

அந்த மதத்தில் எங்களுக்கு எந்த சலுகையும் கிடைக்கவில்லை. எனது பிள்ளைகளை படிக்க வைக்கவும் மிகவும் சிரமப்பட்டேன். இந்து மதத்துக்கு மாறினால் சலுகை கிடைக்கும் என கூறினார்கள். எனது குடும்பத்தினருக்கும் படிப்பதற்கு எந்த பிரச்சினையும் வராது. எனவே மீண்டும் இந்து மதத்துக்கு மாறியுள்ளேன்'' என்றார்.

மதமாற்றும் பணியில் ஈடுபட்ட ஷிமோகாவை பஜ்ரங் தளம் நிர்வாகி வ‌டிவேலு கூறும்போது, ''60 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இருந்து பட்டியலினத்தை சேர்ந்தநூற்றுக்கணக்கான இந்து குடும்பத்தினர் காபி தோட்டங்களுக்கு வேலைக்காக அழைத்து வரப்பட்டனர். இவர்களை இங்குள்ள சிலர் ஆசைக்காட்டி கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றிவிட்ட‌னர்.

ஆனாலும் அவர்களுக்கு அங்குஉரிய மரியாதை வழங்கப்படவில்லை. சாதி ரீதியான பாகுபாடுகளுக்கும் ஆளாயினர். கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதால் பட்டியலின மக்கள் 'எஸ்சி' அந்தஸ்தை இழந்தன‌ர். இவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சலுகை கிடைப்பதில்லை. இதனால் மீண்டும் இந்து மதத்துக்கு மாற விரும்புகின்றனர்.

இவர்களைப் போல சுமார் 100 கிறிஸ்தவர்கள் மீண்டும் இந்து மதத்துக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். நாங்கள் அவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x