Published : 29 Dec 2021 06:21 AM
Last Updated : 29 Dec 2021 06:21 AM

ஏழுமலையான் கோயிலில் ஜன.13-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு

திருமலை: திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி தலைமையில் வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பின்னர் இதுகுறித்து அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டும் மற்றும் வைகுண்ட ஏகாதசியையொட்டி 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டும், சாமானிய பக்தர்களின் வசதிக்காக சில முடிவுகளை தேவஸ்தானம் எடுத்துள்ளது. வைகுண்ட ஏகாதசியான 13-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. விஐபி பக்தர்களுக்கு பின்னர், காலை 9 மணியிலிருந்து சாமானிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் வரை சொர்க்க வாசல் தரிசனத்தை பக்தர்கள் மேற்கொள்ளலாம். ஓமைக்ரான் தொற்று பரவலால் கரோனா நிபந்தனைகளை பக்தர்கள் கண்டிப்பாக கடைபிடித்தல் அவசியம். கரோனா அறிகுறிகள் இருந்தால், தரிசனத்திற்கான முன்பதிவு டிக்கெட் இருந்தாலும் தயவு செய்து சம்மந்தப்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வர வேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஜனவரி 11-ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. 13-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அன்று காலை தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பரின் வீதி உலா நடைபெறும், மறுநாள் துவாதசியன்று, கோயில் குளத்தில் சக்கர ஸ்நானம் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஜனவரி 1 மற்றும் ஜனவரி 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை திருப்பதியில் உள்ளூர் வாசிகளுக்கு மட்டும் தினமும் 5 ஆயிரம் இலவச டிக்கெட்கள் வீதம் மொத்தம் 55 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x