

‘‘முஸ்லிம் ஷரியத் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள் பெண்களுக்கு மறுக்கப் படுகின்றன’’ என்று கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கமால் பாஷா பேசினார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கேரள மாநிலம் கோழிக் கோட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கு நடந்தது. முஸ்லிம் பெண் வழக்கறிஞர்கள் அமைப் பான ‘நிஸா’ என்ற அரசு சாரா நிறுவனம் இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது.
‘அரசியலமைப்பு - பாலின சமத்துவம் - நம்பிக்கை’ என்ற தலைப்பில் நடந்த அந்தக் கருத்தரங்கில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கமால் பாஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
முஸ்லிம் ஷரியத் சட்டப்படி, முஸ்லிம் ஆண்கள் 4 முறை திருமணம் செய்து கொள்ள உரிமை அளிக்கப்படுகிறது. அந்த உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுவது ஏன்? முஸ்லிம் ஷரியத் சட்டம் பெண்களுக்கு எதிராகவே பயன் படுத்தப்பட்டு வருகிறது.
திருமணம் குறித்த விவகாரங் களில் தீர்ப்பளிக்கும்போது, ஆண்களின் அதிகாரத்தை நிலை நிறுத்தும் வகையில் பாரபட்சமான முறையில் முஸ்லிம் மதத் தலைவர் கள் தீர்ப்பளிக்கின்றனர். இந்த முக்கியமான விஷயம் குறித்து மதரீதியான கூட்டங்களின்போது அந்த தலைவர்கள் விவாதிக்க வேண்டும்.
திருமண விவகாரங்களில் தீர்ப்பு வழங்கும் மதத் தலைவர்கள், தங்களுக்கு தீர்ப்பளிக்கும் தகுதி உள்ளதா என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மக்களும் அவர்களது தகுதி குறித்து விவாதிக்க வேண்டும்.குர்ஆன் புனித நூலில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் கூட பறிக்கப்படுகின்றன.
குர்ஆனில், திருமணம் மற்றும் விவாகரத்து போன்ற விஷயங் களில் முடிவெடுக்கும் சுதந்திரம் பெண்களுக்கும் வழங்கப்பட் டுள்ளது.
பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது நியாயமற்றது. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் கூட தயக்கம் காட்டி வருகிறது. இந்த அநீதிக்கு முடிவு கட்ட பெண்கள் முன்வரவேண்டும். முஸ்லிம் ஷரியத் சட்டத்தில் ஆண் - பெண் பாரபட்சம் காட்டப்படுகிறது. சம உரிமை மறுக்கப்படுவதுடன், சொத்துரிமை உட்பட பல பிரச்சினைகளில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
குடும்ப வன்முறை சட்டம் - 2005ன் படி, கணவரின் சொத்துக்களில் மனைவிக்கு உள்ள உரிமை குறித்து தெளிவாக வரையறை செய்து விட்டால், பெண்களை பாதுகாப்பது எளிதாக இருக்கும்.
இவ்வாறு நீதிபதி கமால் பாஷா பேசினார்.
பலதார மணத்தை பல முஸ்லிம் நாடுகளே தடை செய்து விட்டன. ஆனால், முஸ்லிம் ஷரியத் சட்டம் இந்தியாவில் இன்னும் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.