Last Updated : 25 Mar, 2016 01:35 PM

 

Published : 25 Mar 2016 01:35 PM
Last Updated : 25 Mar 2016 01:35 PM

உலகின் 50 மிகப்பெரிய தலைவர்கள் பட்டியலில் அரவிந்த் கேஜ்ரிவால்

ஃபார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ள உலகின் 50 மிகப்பெரிய தலைவர்கள் பட்டியலில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் பெயர் இடம்பெற்றுள்ளது.

அமேசான் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் பிஸாஸ் என்பவர் முதலிடம் வகிக்கும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் கேஜ்ரிவால் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது உலகை மாற்றவும் இந்தக் காரணத்திற்காக பிறருக்குத் தூண்டுகோலாகவும் இருக்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் இந்த ‘வேர்ல்ட்ச் 50 கிரேட்டஸ்ட் லீடர்ஸ்’ என்ற பார்ச்சூன் இதழ் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் 47 வயதான ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் 42-ம் இடத்தில் உள்ளார். இந்தியாவிலிருந்து இவர் மட்டும்தான் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தெற்கு கரோலினா இந்திய-அமெரிக்க கவர்னர் நிக்கி ஹேலே 17-வது இடத்திலும் மற்றொரு இந்திய-அமெரிக்கர் ரேஷன் சவுஜனி 20-வது இடத்திலும் உள்ளனர்.

புதுடெல்லியில் மாசுக்கட்டுப்பாட்டு கொள்கையை தீவிரத்துடன் அமல் படுத்த வாகன ஒற்றை, இரட்டை இலக்க முறையை கொண்டு வந்ததற்காக அரவிந்த் கேஜ்ரிவால் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இது குறித்து ஃபார்ச்சூன் கூறும்போது, “ஒற்றை, இலக்க எண் கொண்ட வாகனங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் சாலைகளில் அனுமதிக்கப்படும் இந்தத் திட்டத்தை ஆரம்பத்தில் பலரும் சந்தேகத்துடன் கேலி செய்தனர். ஆனால் இதனால் சாலையில் வாகன நெரிசல் குறைந்ததோடு காற்றில் மாசுத் துகள்கள் சேரும் விகிதம் ஒரு மணிநேரத்துக்கு 13% குறைந்தது. டெல்லிவாசிகள் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது” என்று கூறியுள்ளது.

இந்தப் பட்டியலில் ஜெர்மன் பிரதமர் அஞ்சேலா மெர்கெல் (2), மியான்மர் ஜனநாயக ஆதரவுத் தலைவர் சூ கியி (3), போப் (4), டிம் குக், சி.இ.ஓ. ஆப்பிள் (4) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x