Published : 28 Dec 2021 07:30 AM
Last Updated : 28 Dec 2021 07:30 AM

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி திட்டத்தில் பணியாற்றிய இந்திய பெண் விஞ்ஞானி

மும்பை: ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி திட்டத்தில் இந்திய பெண் விஞ்ஞானி ஒருவர் பணியாற்றியுள்ள விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா,ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சிமையம், கனடா ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை (ஜேடபிள்யூஎஸ்டி) உருவாக்கி உள்ளது.

தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவிலுள்ள கொரு விண்வெளி தளத்திலிருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் இந்த தொலைநோக்கி கடந்த சனிக்கிழமை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு உள்ளது. ரூ.75 ஆயிரம்கோடி செலவில் இந்தத் தொலைநோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகம் தோன்றியது எப்படி என்பது உட்பட பல்வேறு அறிவியல் அதிசயங்களை இந்த தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக நட்சத்திரங்கள் இறந்தாலும் பல ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதால் அதன் ஒளி நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். அந்த நட்சத்திரம் இறந்தாலும் அதன் ஒளியை வைத்து அதனை ஆராய முடியும். இப்படி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இறந்த நட்சத்திரங்கள் குறித்தும் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆராயவுள்ளது.

இந்த விண்வெளி தொலைநோக்கி திட்டத்தில் ஏராளமானவிஞ்ஞானிகள் பணியாற்றியுள்ளனர். இதில் இந்திய விஞ்ஞானி டாக்டர் ஹஷிமா ஹசனும் ஒருவர். இந்தியா உட்பட 7 நாடுகளின் விஞ்ஞானிகள் இந்தத் திட்டத்தில் பங்கேற்று இருந்தனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்த ஹஷிமா ஹசன், இந்தத் திட்டத்தில் பங்கேற்று இந்தியர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் ஹஷிமா கூறும்போது, “ரஷ்யாவின் சார்பில்ஸ்புட்னிக் விண்கலம் ஏவப்பட்டபோது எனது பாட்டி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கண்டு ரசித்தனர். அப்போதே எனக்கு விண்வெளி துறை மீது ஆர்வம் வந்துவிட்டது. நிலவில் மனிதர்கள் இறங்கியபோது நானும் ஒரு நாள் நாசாவில் பணிபுரிவேன் என்று கனவு கண்டேன். அந்தக் கனவு நிறைவேறியுள்ளது. விண்வெளித் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஃபார் ஃபண்டமண்டல் ரிசர்ச் (டிஐஎஃப்ஆர்) நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஹஷிமா, பின்னர் லண்டன் சென்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அணு அறிவியலில் டாக்டரேட் படிப்பைமுடித்தார். பின்னர் அமெரிக்கா சென்று 1994-ல் நாசாவில் விஞ்ஞானியாக சேர்ந்தார். தற்போது விண்வெளி தொலைநோக்கி திட்டத்தில் இணைந்து இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x