Published : 28 Dec 2021 08:08 AM
Last Updated : 28 Dec 2021 08:08 AM

இமாச்சலில் 4 ஆண்டு பாஜக ஆட்சியில் விரைவான வளர்ச்சி; ரூ.28 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி பிரதமர் மோடி உரை

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் கடந்த 4 ஆண்டுகால பாஜக ஆட்சியில் விரைவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இமாச்சல பிரதேசத்தில் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதையொட்டி இம்மாநிலத்தில் ரூ.28,197 கோடி மதிப்பிலான 287 முதலீட்டு திட்டங்களுக்கான தொடக்க விழா, முதல்வர் ஜெய்ராம் தாக்கூரின் சொந்த மாவட்டமான மண்டியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இமாச்சலில் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள நீர்மின்சார திட்டங்கள், காலநிலைக்கு உகந்த புதிய இந்தியாவின் ஒரு பகுதியாகும். மேலும் இத்திட்டம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கம் கொண்டதாகவும் இருக்கும். வளர்ச்சிக்கான உட்கட்டமைப்புகளை கட்டி எழுப்பும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக நம் நாடு மேற்கொள்ளும் முயற்சிகள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன.

2030-ம் ஆண்டுக்குள் புதைபடிமம் அல்லாத ஆற்றல் மூலங்களில் இருந்து 40 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என இந்தியா 2016-ல் இலக்கு நிர்ணயித்தது. ஆனால் இந்த ஆண்டு நவம்பரிலேயே இந்த இலக்கை நாம் அடைந்துவிட்டோம். இதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்ளலாம்.

ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான இமாச்சலபிரதேச அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த அரசு தனதுஆட்சிக்காலத்தில் கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக போராடியதுடன் மாநிலத்தின் வளர்ச்சி நின்று விடாமல் பார்த்துக்கொண்டது. 4 ஆண்டு களில் மாநிலத்தில் விரைவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டின்மிக முக்கிய மருந்து உற்பத்தி மையங்களில் ஒன்றாக இமாச்சல பிரதேசம் விளங்குகிறது.

வரும் ஜனவரி 3 முதல் 15-18 வயதுக்கு உட்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் என நமது அரசு அறிவித்துள்ளது. மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முதியோருக்கு ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட் டுள்ளது. இத் திட்டங்களை நிறைவேற்றுவதில் இமாச்சலபிரதேசம் முன்னணியில் இருக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

பல்வேறு வளர்ச்சித் திட்டங் களுடன் ரூ.6,700 கோடி மதிப் பிலான ரேணுகாஜி அணை திட்டத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த அணை காரணமாக டெல்லிக்கான தண்ணீர் விநியோகம் கணிசமாக அதிகரிக்கும்.

நிகழ்ச்சியில் லுஹ்ரி நிலை 1 நீர்மின் திட்டம், தவுலசித் நீர்மின் திட்டம், சவ்ரா-சூடு நீர்மின் திட்டம் ஆகியவையும் தொடங்கி வைக்கப்பட்டன. ரூ.11,281 மதிப்பிலான இந்த திட்டங்கள், பிராந்தியத்தில் நீர்மின் உற்பத்திக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதை நோக்கமாக கொண்டுள்ளன.

முன்னதாக பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x