

பேஸ்புக் சாட்டிங்கில் 'ஹாய் சிஷ்யா' என அழைத்த இளைஞரை அவரது நண்பர்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸார் 2 நண்பர் களை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
பெங்களூருவை அடுத்துள்ள பெத்தஹலசூரு பகுதியை சேர்ந்தவர் அருண் ராவ் (24). இவர் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு பெட்டக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது கல்லூரி நண்பரான சந்தீப் (25) உடன் பேஸ்புக்கில் சாட் செய்துள்ளார். அப்போது அருண் அவரை 'ஹாய் சிஷ்யா' என அழைத்துள்ளார். மேலும் அவரது புகைப்படத்துக்கு 'சூப்பர் சிஷ்யா' என கமெண்ட் போட்டுள்ளார். அதற்கு அருணின் நண்பர் அஜித் என்பவரும் சந்தீப்பை 'சிஷ்யா என அழைத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சந்தீப், அருண் மற்றும் அஜித் துடன் பேஸ்புக்கிலே சண்டையிட் டுள்ளார். மேலும் சந்தீப், அருணை செல்போனில் தொடர்பு கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் சந்தீப் தனது நண்பர்களுடன் அருண் வீட்டுக்குச் சென்று அவரை அடித்து உதைத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அருணின் தாயார் அமராவதி, தமிழகத் திலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். பிரச்சினை முடிந்ததாக நினைத்து கடந்த மாதம் 26-ம் தேதி அருண் பெங்களூரு திரும்பியுள்ளார்.
இதை அறிந்த சந்தீப் கடந்த திங்கள்கிழமை இரவு 8.30 மணிக்கு தனது நண்பர்களுடன் அருணின் வீட்டுக்கு சென்றள்ளார். அருணிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி அவரை அழைத்துச் சென்று, சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அருணின் நண்பர்கள் அவரை படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இதுதொடர்பாக சிக்கஜாலா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக சந்தீப், அவரது நண்பர் அர்ஜுன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ் வாறு போலீஸார் தெரிவித்தனர்.
‘பெங்களூரு பாஷையும், சிஷ்யாவும்’
சென்னையில் நண்பர்கள் மத்தியில் மிடுக்காய் திரிபவர்களை 'தல' எனவும், அவர்களுக்கு அடிப்பொடி வேலை செய்பவர்களை 'அல்லக்கை' என்றும் அழைப்பதுண்டு. அதேபோல பெங்களூரு வட்டார வழக்கில் நண்பர்கள் மத்தியில் பெரிய ஆளாக காட்டிக் கொள் பவர்களை 'குரு' என கூப்பிடுவார்கள். அல்லக்கை போல வலம் வருவோரை 'சிஷ்யா' என அழைப்பார்கள். இதனால் பெங்களூருவில், 'சிஷ்யா' என அழைத்தால் அவமானமாக கருதப்படுகிறது.