Published : 27 Dec 2021 11:58 AM
Last Updated : 27 Dec 2021 11:58 AM

காந்தி, முஸ்லிம் குறித்து அவதூறு; கோட்சேவுக்குப் புகழாரம்: இந்து மதத் தலைவர் மீது சத்தீஸ்கரில் வழக்குப்பதிவு

காளிச்சரண் மகராஜ் பேசிய காட்சி | படம் உதவி ட்விட்டர்

ராய்பூர்: மகாத்மா காந்திக்கு எதிராகவும், முஸ்லிம் மதம் குறித்தும் அவதூறாகப் பேசி, நாதுராம் கோட்சேவை புகழ்ந்த இந்து மதத் தலைவருக்கு எதிராக சத்தீஸ்கர் போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

ராய்பூர் நகரில் தர்மா சனாசத் எனும் “மதங்களின் நாடாளுமன்றம்” நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் கடைசி நாளான நேற்று சிறப்பு விருந்தினராக முதல்வர் பூபேஷ் பாகல் பங்கேற்ற அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், இதில் கடைசிநேரத்தில் வேறு வேலை இருப்பதாகக் கூறி முதல்வர் பூபேஷ் பாகல் புறக்கணித்தார். இ்ந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த காளிச்சரண் மகராஜ் என்ற துறவி பேசிய பேச்சுதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

மகாத்மா காந்தி குறித்தும், முஸ்லிம் மதம் குறித்தும் கடுமையான சொற்களால் அவதூறு பேசியதாகவும், நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததாகவும் வீடியோவில் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வீடியோவில் காளிச்சரண் மகராஜ் பேசுகையில் “இந்த தேசத்தையும், இந்து மதத்தையும் பாதுகாக்க வேண்டியது முதல் கடமை. இந்து மதத்தைச் சேர்ந்த வலிமையான, அர்ப்பணிப்பு உள்ள தலைவரை மக்கள் தேர்ந்தெடுத்தால்தான் இவற்றை பாதுகாக் முடியும். நம்முடைய வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் சிறந்தவர்கள், நாகரிகமானவர்கள், அவர்கள் தேர்தலின்போது வாக்களிக்கத் தேவையில்லை.

முஸ்லிம் மதத்தின் நோக்கமே அரசியல் மூலம் கைப்பற்றுவதுதான். நம்முடைய கண் முன்னே கடந்த 1947-ம் ஆண்டு தேசப்பிரிவினை நடந்தது, அதற்கு முன் ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றினார்கள் வங்கதேசத்தையும், பாகிஸ்தானையும்கூட அரசியல் மூலம்தான் முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள். ஆதலால், மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு நான் தலை வணங்குகிறேன்.

முஸ்லிம் அதிகமாக இருக்கும் இடங்களில் காவிக் கொடி ஏந்தி எந்த கூட்டமும் , பேரணியும் நடத்தாதீ்ர்கள் என்று போலீஸார் எங்களிடம் தெரிவித்தார்கள். இது போலீஸாரின் தவறு அல்ல. நிர்வாகத்தின், அரசின் அடிமைகள்தான் போலீஸார். தலைவரின் அடிமைதான் அரசு. ஆதலால், வலிமையான இந்து தலைவர் உருவாக போலீஸார் ஆதரவளிக்கமாட்டார்கள்” என்று பேசினார்.

மகாத்மா காந்தியை அவதூறாகப் பேசியது, இரு மதங்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசியதாக காவல்துறையிடம் காங்கிரஸ் நிர்வாகி பிரமோத் துபே புகார் செய்தார். இந்தப் புகாரையடுத்து, காளிச்சரண் மீது திக்ராபாரா காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிசி 505(2) 294 ஆகிய பிரிவுகளில் காளிச்சரண் மீது முதல் தகவல் அறிக்கையை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x