சமீபத்திய நிகழ்வுகள் ‘எதேச்சையானது’ அல்ல; குறிப்பிட்ட கொள்கை சார்ந்தது: என்.ராம்

சமீபத்திய நிகழ்வுகள் ‘எதேச்சையானது’ அல்ல; குறிப்பிட்ட கொள்கை சார்ந்தது: என்.ராம்
Updated on
2 min read

“பாசிசம் உங்கள் முகத்தை உற்றுப் பார்க்கிறது என்று நீங்கள் முடிவு கட்டிவீட்டீர்கள் என்றால் மதச்சார்பின்மைக்கும் பன்மைத்துவ கலாச்சாரத்துக்கும் எதிரான பகைவர்களை நீங்கள் அதி மதிப்பீடு செய்வீர்கள்” என்று கஸ்தூரி அண்ட் சன்ஸ் (தி இந்து) சேர்மேன் என்.ராம் தெரிவித்தார்.

மும்பையில், “மதச்சார்பின்மையைக் காக்க பன்மைத்துவ கலாச்சாரத்தையும், சுதந்திரத்தையும் கொண்டாடுதல்” என்ற தலைப்பில் நடக்கும் இரண்டு நாள் கருத்தரங்கத்தின் முதல் நாளில் என்.ராம் இவ்வாறு தெரிவித்தார்.

மும்பை கலெக்டிவ் என்ற இந்தக் குழு கல்வியியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் உட்பட வாழ்வின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரே சித்தாந்த நோக்கம் கொண்ட முற்போக்குவாதிகளை ஒருங்கிணைப்பதாகும்.

இதில் பேசிய என்.ராம், சமீபகாலங்களில் நடைபெறும் சம்பவங்கள் (ஜே.என்.யூ மற்றும் சில), எதேச்சையானவை அல்ல, நிச்சயமாக ஒரு வகையான அமைப்பொழுங்கு உள்ளது ஒரு குறிப்பிட்ட கருத்தியல் சார்புடையதாக தெரிகிறது. ஆனாலும் இதனை பாசிச யுகம் என்று கூறிவிட முடியாது என்றார்.

ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தின் அரசியல் ஆய்வுத்துறை பேராசிரியர் கோபால் குரு கூறும் போது, “தேசியவாதம் என்பது போதுமான அளவுக்கு பன்மைத்துவமாக இல்லை” என்றார்.

இதில் குழு விவாதத்தில் கலந்து கொண்ட பத்திரிகை நிருபர் ஜோதி புன்வானி மும்பையில்“1992 கலவரங்களுக்குப் பிறகே கைவிடப்பட்ட, ஒதுக்கப்பட்ட, நலிவுற்றோர் வாழும் பகுதிகள் அதிகம் உருவாகியுள்ளன” என்றார்.

வரலாற்றாசிரியர் கே.எம்.ஷ்ரிமாலி கூறும்போது, ஒரு வரலாற்றாசிரியனின் கடமை என்னவெனில் மாயைகளை கட்டமைப்பதை கூர்ந்து கவனித்து அம்பலப்படுத்துவதாகும் என்று கூறி சங்பரிவார் எப்படி வரலாற்றை திரித்து எழுதி வருகிறது என்று பேசினார். கலவிப்புலத்தில் சங்பரிவார் தனது வரலாற்றை எப்படி புகுத்தியுள்ளது, புகுத்துகிறது என்பதை பல்வேறு உதாரணங்களுடன் விளக்கினார்.

மற்றொரு குழு விவாதத்தில் வரலாறு மற்றும் தரவு பெரிய பங்காற்றியது. டாக்டர் அம்பேத்கர், சிவாஜி, பகத் சிங் ஆகியோரை இந்துத்துவ அரசியல் எப்படி தன்வசப்படுத்தி வருகிறது என்பது இதில் முக்கியப் பங்காற்றியது. சமன்லால் என்ற பேராசிரியர் பகத் சிங் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டவர் இவர் பகத் சிங்கை எப்படி சங்பரிவார் தன்வசமாக்கிக் கொண்டது என்பதை ருசிகரத் தகவல்களுடன் அம்பலப்படுத்தினார். பகத் சிங் உண்மையில் ஒரு மார்க்சிய நாஸ்திகவாதி.

அதே போல் சிபிஎம் உறுப்பினர் அசோக் தவாலே கூறும்போது, சிவாஜி பற்றிய காவி விளக்கங்களை மறுத்தார். முஸ்லிம்கள் குறித்த சிவாஜியின் முற்போக்கு சகிப்புத்தன்மை பற்றி பேசினார். முன்னாள் எம்.பி. பிரகாஷ் அம்பேத்கர், சங்கப்பரிவாரத்திற்கும், அம்பேத்கார் தத்துவத்திற்கும் உள்ள மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகளை முன்வைத்தார்.

கடைசியாக நடந்த குழு விவாதத்தில், பத்திரிகையாளர்கள் நிகில் வாக்லே, பி.சாய்நாத், சஷிகுமார், கீதா சேஷு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் ஊடகங்கள் பற்றி பேசிய வாக்லே, “என்னுடைய 35 ஆண்டுகால பத்திரிகை தொழிலில் இது மிகவும் மோசமான காலக்கட்டம். இப்போது பெரிய அளவுக்கு நஞ்சு ஊறிப்போயுள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம் ஆகியவற்றை உடைக்க வேண்டுமெனில் முதலில் ஊடகத்தை உடைக்க வேண்டும், அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.

பி.சாய்நாத் கூறும்போது, “இந்திய மக்கள் தொகை எவ்வளவுக்கெவ்வளவு பல்படித்தானதாக மாறி வருகிறதோ, ஊடகங்கள் ஒருபடித்தானதாகி வருகிறது. அதாவது ஊடகங்கள் கார்ப்பரேட்மயமாகி வருகின்றன. ஜர்னலிசம் என்பதை வருவாய்க்கான ஒரு ஊற்றாகப் பார்க்கத் தொடங்கி விட்டனர். அரசியல்ரீதியாக இந்திய ஊடகங்கள் சுதந்திரமாகவே உள்ளன, ஆனால் லாபம் என்பதில் சிறையுற்றுள்ளது.

ஜர்னலிசத்தின் கடந்த பத்தாண்டுகளின் மிகப்பெரிய அம்பலப்படுத்துதல் எதுவும் மைய நீரோட்ட பத்திரிகையிலிருந்து, பத்திரிகையாளர்களிடமிருந்து வரவில்லை மாறாக ஜூலியன் அசாஞ்சே, எட்வர்டு ஸ்னோடன், மற்றும் செல்ஸீ மேனிங் ஆகியோரிடமிருந்தே வந்துள்ளன” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in