Last Updated : 26 Dec, 2021 10:09 AM

 

Published : 26 Dec 2021 10:09 AM
Last Updated : 26 Dec 2021 10:09 AM

இனப்படுகொலை நடக்கும் முன் வெறுப்புப் பேச்சுதான் தூண்டிவிடும்: ஹரித்துவார் சம்பவம் குறித்து அசோக் கெலாட் வேதனை 

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் | கோப்புப்படம்

ஜெய்பூர்


உலகில் இனப்படுகொலை நடந்த நாடுகளில் பார்த்தால் இனப்படுகொலை நடப்பதற்கு முன், தீவிரமான வெறுப்புப்பேச்சுதான் தூண்டுகோலாக இருந்திருக்கிறது. ஹரித்துவாரில் நடந்த மதமாநாட்டில் வெறுப்புணர்வுடன் பேசியதில் யாரும் கைது செய்யப்படாதது வெட்கமாக இருக்கிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வேதனை தெரிவித்துள்ளார்.

ஹரித்துவாரில் கடந்த 17ம் தேதிமுதல் 20ம் தேதிவரை யாதி நரசிம்மானந்த் கிரி சார்பில் நடந்த ஜூனா அகாதாவில் முஸ்லிம் மதத்தினருக்கு எதிராக சிலர் பேசிய பேச்சுகள் பேச்சுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின.

இந்தப் பேச்சுக்கு முன்னாள் ராணுவத் தளபதி, சமூக ஆர்வலர்கள், சர்வதேச டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்திலோவா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீஸாரிடம் முதலில் கேட்டபோது, யாரும்புகார் அளிக்காததால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது எனத் தெரிவித்தனர். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர், ஆர்டிஐ ஆர்வலர் சாகேத் கோகலே ஆகியோர் அளித்த புகாருக்குப்பின், இந்துத்துவா தலைவர் வாசிம் ரிஸ்வி என்ற ஜிதேந்திர நாராயன் தியாகி மீது மட்டும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரையும் உத்தரகாண்ட் போலீஸார் கைது செய்யவில்லை.

இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து கருத்துத் தெரிவித்துள்ளார் அதில்” ஹரி்த்துவார் மதமாநாட்டில் சிலர் பேசிய பேச்சு அடங்கிய வீடியோக்கள் ஆத்திரமூட்டுபவையாகவும், வன்முறையைத் தூண்டுபவையாகவும் இருந்தன. ஆனால், இந்த வீடியோ வெளியானபின்பும் யார்மீதும் நடவடிக்கையில்லை, கைது செய்யப்படவில்லை என்பது வெட்கமாக இருக்கிறது

பிரதமர்மோடி, உள்துறை அமைச்சர், உத்தரகாண்ட் முதல்வர்ஆகியோர் மவுனமாக இருக்கிறார்கள். நாட்டில் ஒரு சமூகத்தின் மக்களை மட்டும் சட்டவிரோத அமைப்பினர் இனப்படுகொலை செய்வது பற்றி பேசுகிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் காட்டாட்சி நடக்கிறது என்பது தெரிகிறது. உலகில் எங்கெல்லாம் இனப்படுகொலை நடந்ததோ அது நடப்பதற்கு முன் இதுபோன்ற வெறுப்புணர்வு பேச்சுதான் பேசப்பட்டுள்ளன.ஆனால், இந்த சம்பவத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை.

வன்முறை மற்றும் கொலைகார மனநிலையுடைய இவர்கள் எந்த மதத்தின் பிரதிநிதிகளாக இருக்க முடியுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். எந்த திசையில் அவர்கள் நாட்டைக் கொண்டு செல்ல விரும்புகிறார்கள். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அசோல் கெலாட் வலியுறுத்தியுள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x