Published : 29 Mar 2016 07:46 AM
Last Updated : 29 Mar 2016 07:46 AM

பிரஸல்ஸ் தாக்குதலில் காணாமல் போன தமிழகத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் பலி: 6 நாட்களுக்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரஸல்ஸ் தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்தில் தமிழக சாப்ட்வேர் இன்ஜினீயர் ராகவேந்திரா கணேசன் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் 6 நாட்களுக்குப் பிறகு நேற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த 22-ம் தேதி பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐ,எஸ். தற்கொலைப் படை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 31 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இன்போசிஸ் சார்பில் பிரஸல்ஸில் பணியாற்றி வந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் ராகவேந்திரா கணேசன் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு காணாமல் போனார். அவரை கண்டுபிடிக்க பெற்றோர் மற்றும் சகோதரர் பிரஸல்ஸ் சென்று தேடி வந்தனர்.

மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு மும்பையில் வசிக்கும் தனது தாயார் அன்னபூரணியிடம் கணேசன் ஸ்கைப் மூலம் பேசியுள்ளார். அப்போது மெரோடியில் இருந்து பார்க் நகருக்கு மெட்ரோ ரயிலில் சென்று கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தற்கொலைப்படைத் தாக்குதலில் அவரும் சிக்கி பலியாகி உள்ளார். 6 நாட்களுக்குப் பிறகு நேற்று அவரது மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவலை பெல்ஜியத்துக்கான இந்தியத் தூதர் மன்ஜிவ் சிங் புரி, ராகவேந்திரா கணேசன் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

ராகவேந்திராவின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை பெல்ஜியத்தில் உள்ள தூதரக அதிகாரிகள் செய்துவருகின்றனர்.

ராகவேந்திராவின் மனைவி பிரசவத்துக்காக சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்தார். அவருக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. ராகவேந்திரா தனது குழந்தையை பார்க்க கடந்த மாதம் சென்னைக்கு வந்து சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x