

இமாசலப்பிரதேசத்தில், சுற்றுலா சென்ற ஹைதராபாத் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 24 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டனர். இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இது தொடர்பாக நீர்மின் நிலையத்தின் 2 பொறியாளர்கள் மற்றும் 1 பிட்டரை மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.தெலங்கானா மாநிலம், ஹைதரா பாத்தில் உள்ள தனியா ர்பொறி யியல் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் படிக்கும் மாணவர்கள் 48 பேர் இமாசலப்பிர தேசத்துக்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்தனர்.
இவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை மாண்டி அருகேயுள்ள பியாஸ் ஆற்றுப் பகுதிக்குச் சென்றனர். இவர்களில் 6 மாணவிகள், 18 மாணவர்கள், டூர் ஆபரேட்டர் என 25 பேர் பியாஸ் ஆற்றில் இறங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது அருகில் லார்ஜி நீர்மின்நிலைய திட்டம் செயல்படுத்தப்படும் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை அதிகரித்துள்ளனர். இதனால் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 25 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர்.
மீட்பு பணியில் 70 பேர்
போலீஸார், ஊர்க்காவல் படையினர், உள்ளூர் நீர்மூழ்கி வீரர்கள், தோணி இயக்குபவர்கள் ஆகியோர் உதவியுடன் 70 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஒரு மாணவரின் உடல், தலோட் அருகே சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டது. மேலும் நால்வரின் உடல்கள் பான்டோஹ் அணையில் இருந்து மீட்கப்பட்டன.
இந்நிலையில் எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீட்புக்குழுவினர் படகுகளில் சென்று ஆற்றின் நெடுகிலும் தேடி வருகின்றனர். அவர்களுக்கு 12 நீர்மூழ்கி வீரர்கள் உதவி வருகின்றனர். “காணாமல் போனவர்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது. விரைவில் எஞ்சிய உடல்களை மீட்போம்” என்று அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே மாநில முதல்வர் வீரபத்ர சிங் சம்பவ இடத்தை திங்கள்கிழமை பார்வையிட்டு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
அலாரம் ஒலிக்கவில்லை
“அணையில் தண்ணீர் திறக்கப்படும் முன்பு நீர்மின்திட்ட அதிகாரிகள் அலாரம் ஒலிக்கச் செய்துள்ளனர். ஆனால் மாணவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர்” என்றார் வீரபத்ர சிங். உயிர் தப்பிய மாணவர்களில் ஒருவர் கூறுகையில், “அருகில் உள்ள அணையில் இருந்து அலாரம் எதுவும் ஒலிக்கவில்லை. அப்பகுதியில் எச்சரிக்கை பலகைகூட இல்லை. மேலும் அப்பகுதிக்கு மாணவர்கள் செல்லும்போது உள்ளூர் மக்களும் தடுக்கவில்லை” என்றார்.
சுற்றுலா சென்ற மாணவர்களில் ஒருவரான ரவிக்குமார் கூறுகையில், “வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நண்பர்களை நோக்கி ஓடினேன். ஆனால் நீர்மட்டம் திடீரென 5 - 6 அடி உயர்ந்துவிட்டது. நான் நான்கு ஐந்து பேரை மீட்க முயன்றேன். ஆனாலும் பலனில்லை. கண் முன்னே நண்பர்கள் நீரில் மூழ்கிவிட்டனர்” என்றார்.
சம்பவ இடத்துக்கு அதிகாரி களும் மீட்புக் குழுவினரும் தாமதமாக வந்தனர் என்றும் புகார் கூறப்படுகிறது. இதனி டையே பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்காக, மாண்டியில் ஹெல்ப் லைன் வசதியுடன் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மாண்டி டிவிஷனல் கமிஷனர் தலைமையில் நீதி விசாரணைக்கு முதல்வர் வீரபத்ர சிங் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு காரண மானவர்களை கண்டறியுமாறும், இனிமேல் இதுபோன்ற சம்பவங் கள் நடைபெறாமல் தடுக்க, பரிந்துரைகள் அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
3 அதிகாரிகள் நீக்கம்
மேலும் பணியில் கவனக் குறைவு காரணமாக, நீர்மின் திட்டப் பொறியாளர்கள் மான்ஜீத், தாட்வாலியா, பிட்டர் ஹர்பனஸ் ஆகிய மூவரை மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி திங்கள்கிழமை விமானம் மூலம் குலு சென்று அங்கிருந்து கார் மூலம் சம்பவ இடத்துக்கு சென்றார். மாணவர்கள் தங்கியிருந்த ஹோட்டல், சடலங்கள் வைக்கப்பட்டுள்ள இடம் ஆகியவற்றுக்கும் அவர் சென்று வந்தார்.
“மீட்புப் பணிக்கு மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்” என்றார் அவர். இந்நிலை யில் 20 நீர்மூழ்கி வீரர்கள் உள்ளிட்ட 40 பேரை ராணுவம் மீட்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. ராணுவம் மற்றும் விமானப் படையின் ஹெலிகாப்டர்களும் எஞ்சியவர் களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.