

புதுடெல்லி: பெண்ணின் திருமண வயதை 18-லிருந்து 21- ஆக உயர்த்த வகை செய்யும் குழந்தை திருமண சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் சமீபத்தில் தாக்கல்செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவுக்கு முஸ்லிம் சட்ட வாரியம், முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்டவை எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘பெண்களின் திருமண வயது 21-ஆக உயர்த்தப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். இந்தச் சட்டம்அனைத்து மதத்துக்கும் பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், முஸ்லிம் பெண்கள் இந்தச் சட்டத்தினால் பயனடைய முடியாமல் போய்விடும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்கத்தைச் சேர்ந்த நூர்ஜகான் சஃபியா ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிடம் கூறும்போது, ‘சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது.பிற மதங்களுக்கு நெறிமுறைப்படுத்தப்பட்ட தனிநபர் சட்டம் உள்ளது.
ஆனால், முஸ்லிமாகிய எங்களுக்கு இன்னும் நெறிமுறைப்படுத்தப்பட்ட தனிநபர் சட்டம்இல்லை. இதனால், குழந்தைத்திருமணம், பலதார மணம், முத்தலாக் போன்ற விவகாரங்களில் எங்களால் சட்டரீதியான பாதுகாப்பைப் பெற முடிவதில்லை’ என்று தெரிவித்தார்.
பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கம் 2007-ம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. முஸ்லிம் தனிநபர் சட்டத்தால் முஸ்லிம் பெண்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு எதிராக இவ்வமைப்பு போராடி வருகிறது. முத்தலாக் நடைமுறைைய ஒழிக்க வேண்டும் என்று இவ்வமைப்பு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தது. அது தொடர்பாக இவ்வமைப்பு 2016-ம் ஆண்டு பிரதமர் மோடிக்கு மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.