உ.பி. தொழிலதிபர் வீட்டில் வருமான வரித் துறை சோதனை; கட்டுகட்டாக ரூ.150 கோடி பறிமுதல்: பணத்தை எண்ண முடியாமல் சோர்ந்துபோன அதிகாரிகள்

உத்தர பிரதேசத்தின் கான்பூரை சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இயந்திரங்கள் உதவியுடன் பணம் எண்ணப்பட்டது.படம்: பிடிஐ
உத்தர பிரதேசத்தின் கான்பூரை சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இயந்திரங்கள் உதவியுடன் பணம் எண்ணப்பட்டது.படம்: பிடிஐ
Updated on
2 min read

கான்பூர்: உத்தர பிரதேசத்தில் தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கட்டுகட்டாக குவித்து வைக்கப்பட்டிருந்த பணத்தை எண்ண முடியாமல் அதிகாரிகள் சோர்ந்தனர். பாதுகாப்புப் பணிக்கு துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ்ஜெயின். இவர், ‘திருமூர்த்தி பிராக்ரன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நறுமண திரவியம் தயாரித்து உள்நாடு, வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறார். இதுதவிர வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். வெளிநாடுகளிலும் இவருக்கு கிளைகள் உள்ளன.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமான பியூஷ் ஜெயின், கடந்த நவம்பரில் ‘சமாஜ்வாதி அக்தர்’ என்ற வாசனை திரவியத்தை அறிமுகம் செய்தார். இந்த விழாவில் அகிலேஷ் யாதவ் உட்பட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

திடீர் சோதனை

தொழிலதிபர் பியூஷ் ஜெயின், ஜிஎஸ்டி மற்றும் வருமான வரிஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஜிஎஸ்டி புலனாய்வு துறை அதிகாரிகள், வருமான வரித் துறை அதிகாரிகள் இணைந்து பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பாதுகாப்புக்காக துணை ராணுவப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

கான்பூர், கன்னோஜி, மும்பை மற்றும் குஜராத் உட்பட பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைநடத்தப்பட்டது. இதில் பியூஷ் ஜெயினின் கான்பூர் வீட்டில் கட்டுகட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை இயந்திரங்கள் மூலம் அதிகாரிகள் எண்ணத்தொடங்கினர். 500 ரூபாய் நோட்டுகள்பார்சல் செய்யப்பட்டு கட்டுகட்டாகமலைபோல குவித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பணத்தை எண்ண முடியாமல் சோர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து ஸ்டேட் வங்கிஅலுவலர்கள் உதவிக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் பணம் எண்ணும் இயந்திரங்களுடன் வந்து இடைவிடாது பணத்தை எண்ணி வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி பியூஷ்ஜெயின் வீட்டில் ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இயந்திரங்கள் உதவியுடன் பணத்தைஎண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தொழிலதிபர் பியூஷ் ஜெயின் ரூ.800 கோடி அளவுக்கு வரிஏய்ப்பு செய்திருப்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை வருமானவரித் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து அவரிடம் தீவிரவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

‘‘பிக் பஜார் என்ற பெயரில் தொழிலதிபர் பியூஷ் ஜெயினின் வீடு, அலுவலகங்களில் ஒரே நேரத்தில் திடீர் சோதனை நடத்தினோம். இதில்போலி நிறுவனங்கள் பெயரில் அவர்பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவருக்குசொந்தமான நறுமண திரவிய விற்பனை நிலையங்கள், பெட்ரோல் நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுவரை ரூ.150 கோடி பறிமுதல் செய்யப்பட்டு ஆர்பிஐ-க்குஅனுப்பப்பட்டுள்ளது’’ என வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆசிஷ் யாதவ் கூறும்போது, ‘‘எங்கள் கட்சிக்கும் பியூஷ் ஜெயினுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அவரோ, அவரது குடும்பத்தினரோ கட்சியில் இல்லை. சமாஜ்வாதி மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது. இதை ஜனநாயகரீதியில் முறியடிப்போம்’’ என்றார்.

பியூஷ் ஜெயினுடன் தொடர்புடைய கான்பூர் ஷிகர் பான் மசாலா நிறுவனம், கணபதி டிரான்ஸ்போர்ட்டர்ஸ் என்ற சரக்கு போக்குவரத்து நிறுவனம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சமாஜ்வாதிக்கு பின்னடைவு

உத்தர பிரதேசத்தில் அடுத்தஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நேரத்தில் சமாஜ்வாதி தலைவர்அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமான தொழிலதிபர் வீட்டில் ரூ.150 கோடிரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது:

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிரதான கட்சிகள், தொழிலதிபர்கள் மூலம் பெரும் தொகையை திரட்டி வருகின்றன. இந்த பணத்தை மாநிலம் முழுவதும் கொண்டு செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமான தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் ரூ.150 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது சமாஜ்வாதிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

கடந்த 18-ம் தேதி அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் மனோஜ் யாதவ், ஜெய்னேந்திர யாதவ் ஆகியோரின் லக்னோ,மெயின்புரி, ஆக்ரா வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு பெரும் தொகை பறிமுதல் செய்யப்பட்டது. இதன்காரணமாக தேர்தல் நேரத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு கடுமையான நிதி பற்றாக்குறை ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in