

லக்னோ: ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக உ.பி.யில் இன்று முதல், இரவுநேர ஊரடங்கு அமல்படுத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிகாரிகளிடம் முதல்வர் கூறியதாவது:
பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு உ.பி.யில் டிசம்பர் 25 முதல், இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில்பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை 200 ஆக கட்டுப்படுத்த வேண்டும். கரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களை இந்த நிகழ்ச்சிகளில் கடைப்பிடிக்க வேண்டும். நிகழ்ச்சி குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்க வேண்டும். முகக்கசவம் அணியாதவர்களுக்கு கடைக்கார்கள் பொருட்களை வழங்கக்கூடாது. இவற்றை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
தெருக்கள் அல்லது சந்தைகளில் நடமாடும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதிசெய்ய போலீஸார்தொடந்து ரோந்து செல்லவேண்டும். பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து உ.பி. வருவோரை கண்டறிந்து கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இது தொடர்பாக பஸ்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். கரோனா 3-வது அலைக்கான சாத்தியக்கூறு கருதி கடந்த காலங்களில் முறையாக ஏற்பாடுகள் செய்திருந்தோம். அதனை மறுஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.
அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “உ.பி.யில் இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். மாநிலத்தில் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. 37 மாவட்டங்களில் கரோனா நோயாளிகள் இல்லை” என்றார்.
- பிடிஐ