

ஜெய்ப்பூர்: அயோத்தி ராமர் கோயிலுக்கு கற்கள் வழங்க 38 சுரங்க நிலங்களை ஏலம் விட்டதன் மூலம் ராஜஸ்தான் அரசு ரூ.245 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து அங்கு ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயிலுக்கு தேவையான சிவப்பு பாறைக்கற்கள் ராஜஸ் தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டம், பன்ஷி பகத்பூர் என்ற இடத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.
இங்கு 38 சுரங்க நிலங்களை ராஜஸ்தான் அரசு ஏலம் விட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.245 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ராஜஸ்தான் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் (சுரங்கங்கள் மற்றும் பெட்ரோலியம்) சுபோத் அகர்வால் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “அரசு நிர்ணயித்த விலையை விட 17 மடங்கு அதிக வருவாய் ஈட்டியுள்ளது. இரண்டு நிலங்கள் 42% அதிக பணத்தை பெற்றன. மத்திய அரசின் இ-பிளாட்பார்ம் மூலம் நவம்பர் 10-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக ஏலம் நடத்தி முடிக்கப்பட்டது” என்றார்.
சுரங்கத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பன்ஷி பகத்பூரில் 120 ஹெக்டேர் நிலம், பொதுத்துறை நிறுவனமான ராஜஸ்தான் மாநில சுரங்கம் மற்றும் தாதுக்கள் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சட்டப்பூர்வ சுரங்கத் தொழில் தொடங்கினால் சுமார் 10 ஆயிரம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள்” என்றார்.
பன்ஷி பகத்பூரில் இதற்கு முன் சட்டவிரோதமாக சிவப்புபாறைக்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.