

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் மாணவர்கள் மனுஸ்மிருதி நகல்களை எரித்து ஆரப்பாட்டம் நடத்தினர்.
பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அதில் வரிகள் பல இடம்பெற்றிருப்பதால் மனுஸ்மிருதி நகல்களை எரித்ததாகவும், சர்வதேச மகளிர் தினத்தன்று இதனைச் செய்வதன் மூலம் பெண்களை இழிவுபடுத்தும் எந்த ஒன்றையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்ற செய்தியை உலகிற்கு அறிவிக்கவே மனுஸ்மிருதி நகல்களை எரித்ததாகவும் ஏ.பி.வி.பி. மாணவர்கள் தெரிவித்தனர்.
மனுஸ்மிருதியில் பெண்களை இழிவு படுத்தும் 40 விஷயங்கள் இருந்தன என்றும் அதனால் மகளிர் தினத்தன்று அதன் நகல்களை எரிப்பது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதையும் மதிப்பதையும் வலியுறுத்தும் செயல் என்று ஏ.பி.வி.பி. தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஆண்களை மயக்குவதே பெண்களின் இயற்கையான குணாம்சம் என்றும், மற்றொரு இடத்தில் பெண்கள் தங்களது வர்க்க குணாம்சத்தினால் இந்த உலகத்தில் ஆண்களின் கவனத்தை திசைதிருப்புபவர்கள், இதில் முட்டாள்கள் மட்டுமல்ல கற்றவர்களும் அவர்கள் வலையில் விழுவர். இருவருமே ஆசையின் அடிமைகளாகி விடுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ‘கொள்கைகள் வேறுபாடுகள்’ காரணமாக ஏ.பி.வி.பி.யிலிருந்து விலகிய பிரதீப் நர்வால் என்பவர் கூறும்போது, “மனுஸ்மிருதியில் உள்ள இந்த 40 விஷயங்கள் பெண்கள் மற்றும் தலித்துக்கு எதிராக உள்ளது. அதனால் அதன் நகல்களை எரிக்க முடிவெடுத்தோம். நான் செய்தது சரியில்லை என்பவர்கள் என்னிடம் பேசலாம்” என்றார்.
இப்போதெல்லாம் ஜே.என்.யூ. வளாகத்தில் எந்த ஒரு நிகழ்வு என்றாலும் நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடனேயே அனுமதி அளித்து வருகிறது, இந்த நிகழ்வு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தோற்றுவிக்காது என்பதால் அனுமதி அளிக்கப்பட்டதாக பல்கலைக் கழக நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.