Last Updated : 24 Dec, 2021 02:01 PM

 

Published : 24 Dec 2021 02:01 PM
Last Updated : 24 Dec 2021 02:01 PM

உத்தராகண்ட்டில் உள்கட்சிப் பூசல் | நீ யாருக்கும் தலைவணங்காதவன் - ட்வீட்டிய ஹரிஸ் ராவத்துக்கு காங். மேலிடம் அழைப்பு

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஸ் ராவத் | கோப்புப்படம்

புதுடெல்லி: அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும் மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு உள்கட்சி பிரச்சினை வரிசைகட்டி நிற்கிறது. ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கரில் உள்கட்சி பிரச்சினை முடிவுக்கு வந்த நிலையில், இப்போது உத்தராகண்டில் எழுந்துள்ளது. இதனால், உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான ஹரி்ஸ் ராவத்தை சமாதானத்துக்கு காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு அழைத்துள்ளது.

ஹரிஸ் ராவத் ட்விட்டர் பதிவில் “விசித்திரமாக இருக்கிறது. அடுத்துவரும் தேர்தல் போர்க்களத்தில் கடலில் நீந்துவதுபோல் நீந்த வேண்டும்.ஆனால், பல இடங்களில் மாநில அமைப்பு ஒத்துழைப்புக்குப் பதிலாக முகத்தை திருப்பிக்கொள்கிறது அல்லது எதிர்மறையாகச் செயல்படுகிறது. ஆளும் கட்சியின் ஆட்சியில் ஏராளமான முதலைகள் உள்ளன.

யாருடைய திசையில் ஒருவர் நீந்த வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்பட்டவர்கள், என் கைகளையும், கால்களையும் கட்டப் பார்க்கிறார்கள். என் மனதில் ஓரத்தில் ஒரு குரல் ஒலிக்கிறது. நீ யாருக்கும் தலைவணங்காதவன். புத்தாண்டு பிறக்கட்டும்... புதிய வழிபிறக்கும். கடவுள் கேதார்நாத் எனக்கு வழிகாட்டுவார்” எனத் தெரிவித்திருந்தார்.

ஹரிஸ் ராவத்தின் பதிவு நிச்சயம் மாநில காங்கிரஸ் தலைமைக்கும் அவருக்கும் இடையே ஏதோ புகைச்சல் இருப்தை தெளிவாக உணர்த்தியது. அடுத்த ஆண்டு தேர்தல் வரும் நேரத்தில் திடீரென உட்கட்சிப் பூசல் எழுவதும், அதை பெரிதாக்க விடாமல் தடுக்கவும் காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது. இதையடுத்து, உடனடியாக ஹரிஸ் ராவத் டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.

உத்தராகண்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது. ஒருவேளை காங்கிரஸ் வெற்றிபெற்றால் ஹரிஸ் ராவத் முதல்வராக்கப்படுவார். ஆனால், இதுவரை காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளராக யாரையும் அறிவிக்கவில்லை, கூட்டுமுயற்சியாக தேர்தலைச் சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சமீபத்தில் ஹரிஸ் ராவத் ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்கள் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது என்பதை காட்டியதையடுத்து, அவசரமாக காங்கிரஸ் மேலிடம் அழைத்துள்ளது. உத்தராகண்ட் எம்எல்ஏ பிரிதம் சிங் கூறுகையில் “ கட்சித் தலைமை எங்களுக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளது. கட்சியின் தலைமை உத்தரவின்படி நடப்போம்.

ஹரிஸ் ராவத் தெரிவித்த கருத்துப் பற்றி ஏதும் கூற முடியாது. தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம். கட்சிக்குள் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வழிகாட்டலில் நடக்கிறோம்.

2022-ம் ஆண்டுநடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியமைக்கும். ஹரிஸ் ராவத் ட்விட்டர் கருத்து குறித்து என்னால் ஏதும் கூற முடியாது. தலைமை கூறுவதுபோல் பணியாற்றும் சாதாரண தொண்டன். இன்று டெல்லியில் ஹரிஸ் ராவத்தை டெல்லி கட்சித் தலைமை அழைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. அதுபற்றிய விவரம் ஏதும் தெரியாது” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனிப்பட்ட முறையில் ஹரிஸ் ராவத்தை தொடர்புகொண்டு பேசி சமாதானம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x