

புதுடெல்லி: ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி எனும் பெயரில் மதம் மாறிய ஷியா வஃக்பு வாரியத்தின் முன்னாள் தலைவரான வசீம் ரிஜ்வீ மீது உத்தராகண்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர் ஹரித்துவாரின் சாதுக்கள் சபையில் வன்முறையையும் தூண்டும் வகையிலாக உரை நிகழ்த்தியதால் இவ்வழக்கு பதிவாகி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஷியா வஃக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ. முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தவர் கடந்த மாதம் இந்து மதத்திற்கு மாறி தன் பெயரை ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி என மாற்றிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், ஹரித்துவாரின் தரம் சன்சத் எனும் சாதுக்கள் சபை கூட்டத்தில் தியாகி நேற்று உரையாற்றினார். அப்போது அவரது பேச்சு வன்முறையை தூண்டுவதாதகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் இருந்ததாகக் கருதப்படுகிறது.
தியாகியின் இந்த உரையாற்றியப் பதிவு, சமூகவலைதளங்களிலும் பரவி வைரலானது. இதனால், உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் போலீஸார் தியாகி மீது வன்முறை தூண்டும் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஹரித்துவார் போலீஸாரின் ட்விட்டர் பதிவில், ‘‘ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் தரம் சன்சத் சபையில் நாராயண் தியாகி உரையாற்றினார். இதனால், அவர் மீது ஐபிசி 153 ஏ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவாகி விசாரணை துவங்கி உள்ளது.’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, அகில இந்திய இத்தஹாதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்.பியுமான அசதுத்தீன் ஒவைசியும் நாராயண் தியாகியை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது கட்சியின் உத்தராகண்ட் மாநிலத் தலைவருக்கு, தியாகி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.
யார் இந்த ரிஜ்வீ?
உ.பி.யில் அதிகமுள்ள ஷியா பிரிவின் முக்கியத் தலைவராகக் கருதப்பட்டவர் வசீம் ரிஜ்வீ. இவருக்கு உ.பி.யின் ஷியா முஸ்லீம் மத்திய வஃக்பு வாரியத்தின் தலைவர் பதவி இதன் காரணமாகக் கிடைத்திருந்தது.
அப்போது முதல், ரிஜ்வீ, இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாகப் பேசி வந்தார். பிரதமர் நரேந்தரமோடியையும் தொடர்ந்து பாராட்டியதுடன், அயோத்தி பிரச்சனையில் ராமர் கோயிலுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்து வந்தார்.
இதுபோன் காரணங்களாலும், தனக்கு எதிராகப் பேவதாலும், சன்னி பிரிவு முஸ்லீம்கள் ரிஜ்வியை முஸ்லிம் அல்லாதவர் எனப் ‘பத்வா’ அளித்திருந்தனர். தாம் சார்ந்த ஷியா பிரிவு முஸ்லீம்களாலும் ரிஜ்வீ வெறுக்கும் நிலை துவங்கியது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 6 இல், இந்துவாக மதம் மாறினார். இனி தான் தம் இந்து மதத்தை நாட்டில் வளர்க்கப் பாடுபடுவதாகவும், இந்துக்களுக்கு எதிராக வாக்களிக்கும் முஸ்லீம்கள் அரசியலில் தோற்க வைப்பதாகவும் சூளுரைத்திருந்தார்.
இவர், சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் திருக்குர்ஆனின் 26 பக்கங்களில் தீவிரவாதம் போதிக்கப்படுவதாகவும் அதை நீக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அமர்வு, ரிஜ்வீக்கு ரூ.50,000 அபராதமும் விதித்திருந்தது நினைவுகூரத்தக்கது.