

புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 122 பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மொத்தம் 358 ஆக தொற்று அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஒமைக்ரான் தொற்று 17 மாநிலங்களி்ல் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 88 பேரும், அதைத்தொடர்ந்து டெல்லியில் 67 பேரும் ஒமைக்ரானால் பாதி்க்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் 38 பேரும், தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகாவில் 31 பேரும், குஜராத்தில் 30 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும்நிலையில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,650 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தொற்று எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து72 ஆயிரத்து 626 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 77,516 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 374 பேர்உயிரிழந்துள்ளனர், இதன் மூலம் உயிரிழப்பு 4 லட்சத்து 79ஆயிரத்து 133 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் வெறும் 0.22 சதவீதம்தான். கடந்த 2020 மார்ச் மாதத்துக்குப்பின் இதுதான் மிகக்குறைவு. குணமடைவோர் சதவீதமும் 98.40 ஆகஅதிகரித்துள்ளது.