அமித் ஷா, மன்மோகன், சோனியா உள்ளிட்ட தலைவர்களுக்கான இசட் பிளஸ் பாதுகாப்பில் பெண் கமாண்டோக்கள் விரைவில் நியமனம்

அமித் ஷா, மன்மோகன், சோனியா உள்ளிட்ட தலைவர்களுக்கான இசட் பிளஸ் பாதுகாப்பில் பெண் கமாண்டோக்கள் விரைவில் நியமனம்
Updated on
1 min read

புதுடெல்லி: இசட் பிளஸ் பாதுகாப்பு பெறும்முக்கிய தலைவர்களுக்கான பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎப் சார்பில் விரைவில் பெண் கமாண்டோக்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு சிஆர்பிஎப் சார்பில் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆண் வீரர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

வீடுகளில் மட்டுமே..

இந்நிலையில், இசட் பிளஸ்பாதுகாப்பு பணியில் முதல்முறையாக பெண் கமாண்டோக்களையும் நியமிக்க சிஆர்பிஎப் திட்டமிட் டுள்ளது. என்றாலும் தற்போதைக்கு இவர்கள் தலைவர்களின் வீடுகளில் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.

இதுகுறித்து சிஆர்பிஎப் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “விஐபி-க்கள் பாதுகாப்புக்காக 32 பெண் கமாண்டோக்களை கொண்ட முதல் குழு பயிற்சியைமுடித்துள்ளது. ஜனவரி 15-ம்தேதிக்குள் அவர்கள் நியமனத்துக்கு தயாராகி விடுவார்கள். தற்போது 32 பெண் கமாண்டோக்கள் மட்டுமே இருப்பதால் ஒவ்வொரு தலைவருக்கும் 5 அல்லது6 பேரை மட்டுமே நியமிக்க முடியும். இதனால் தலைவர்களின் பயணத்தின்போது பாதுகாப்பு அளிப்பது சிரமம். எனினும் தேவைப்பட்டால் தேர்தல் கூட்டங்களின்போது, பெண் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்கப்படும்” என்றார்.

உ.பி., உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தலைவர்களுக்கு பெண் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

முதல் முறை அல்ல

எனினும், முன்னாள் பிரதமர்மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினர் பெண் காமாண்டோக்கள் பாதுகாப்பு பெறுவது இது முதல்முறையல்ல என்று கூறப்படுகிறது.

இவர்களுக்கு இதற்கு முன் எஸ்பிஜி (சிறப்பு பாதுகாப்புப் படை) பாதுகாப்பு வழங்கப்பட்டபோது, அந்தப் படையில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பெண் கமாண்டோக்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in