ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்

ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
Updated on
2 min read

புதுடெல்லி: ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

கரோனா வைரஸின் இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அதன் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 26-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாட்டில் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 236 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 104 பேர் குணம் அடைந்துள்ளனர் என்று கூறியிருந்தது.

ஒமைக்ரான் வைரஸ், கரோனா தொற்றைவிட 3 மடங்கு வேகமாகப் பரவும் என கூறப்படுகிறது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதிய கடிதத்தில், கரோனா கட்டுப்பாட்டு அறைகளை மீண்டும் திறக்க வேண்டும். இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். பண்டிகை காலத்தில் மக்கள் அதிகம் கூடுவதற்கு தடை, திருமணம் மற்றும் இறுதிச் சடங்கில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை குறைத்தல், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் பொதுப் போக்குவரத்து போன்றவற்றில் ஆட்களின் எண்ணிக்கையை குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.

மேலும், மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை, ஆம்புலன்ஸ் வசதியை அதிகரிப்பது, போதிய அளவு மருந்துகள், ஆக்சிஜன் சாதனங்களை கையிருப்பில் வைப்பது, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்வது போன்ற பரிந்துரைகளையும் அவர் வழங்கியிருந்தார்.

இந்தப் பரிந்துரைகளை ஏற்று பல்வேறு மாநிலங்கள் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன.

நாட்டில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவரும் நிலையில், அதை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று மாலை நடந்தது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர். நாடு முழுவதும் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் குறித்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். ஒமைக்ரான் பரவலை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். அப்போது பிரதமர் பேசியதாவது:

எந்த சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட அளவில் தொடங்கி சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் முழு அளவில் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

சுகாதார கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக மாநில அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். அவ்வப்போது மாநிலங்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகளை வழங்க வேண்டும். டெலி மெடிசின் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வழி ஆலோசனை முறைகளை வலுப்படுத்த வேண்டும். கரோனா பரவல் உள்ள பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

கர்நாடகாவில் மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான்

பெங்களூரு

ஒமைக்ரான் வைரஸ் தொற்று, நாட்டில் முதல்முறையாக கடந்த 2-ம் தேதி பெங்களூருவில் 2 பேருக்கு கண்டறியப்பட்டது. இந்நிலையில் கர்நாடக சுகாதார அமைச்சர் சுதாகர் நேற்று கூறியதாவது:

கடந்த 10 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து கர்நாடகா திரும்பிய 390 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 12 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 9 பேர் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, கானா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள். ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 12 பேரில் 7 பேர் பெண்கள். அதில் 2 பேர் 12 வயதுக்கும் குறைவானவர்கள்.

இந்த 12 பேரும் பெங்களூருவில் உள்ள பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 2-ம் தேதி வரை கர்நாடகாவில் திறந்தவெளியில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பிரார்த்தனை கூட்டங்களை சமூக இடைவெளியுடன் நடத்த வேண்டும். இவ்வாறு சுதாகர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in