

புதுடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத் தின் 15-வது கூட்டம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14-வது கூட்டம் டெல்லியில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. அதில் கர்நாடக அரசு மேகேதாட்டு திட்டம் அணைகுறித்து விவாதிக்க வலியுறுத்தியதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்புதெரிவித்தது. இதனால் மேகேதாட்டு திட்டம் குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆணையத்தின் 15-வது கூட்டம் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது. அதில் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டம் திடீரென டிசம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று முன் தினம் கர்நாடக சட்டப்பேரவையில் கூறும்போது, ''காவிரி மேலாண்மை ஆணையத் தின் அடுத்த கூட்டத்தில் (டிசம்பர் 27) மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி கிடைக்கும். அதற்கான முயற்சிகளில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், 27-ம் தேதி நடைபெறுவதாக இருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் மட்டும் 3 முறைஆணையத்தின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப் பிடத் தக்கது.