

மகாராஷ்டிரம் மாநிலத்தில் வெடித்த வன்முறைச் சம்பவங்களுக்கும், வலதுசாரி அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என காவல்துறை உளவுப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த வன்முறைச் சம்பவங்களுக்கும் சாம்பாஜி பிரிகேடுக்கு தொடர்பு இருக்கலாம் என புலன்விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், "வன்முறைச் சம்பவங்கள் நடந்த விதத்தை உற்று கவனித்தால் சில விஷயங்கள் உறுதியாகின்றன. வன்முறைச் சம்பவங்கள் சாம்பாஜி பிரிகேட் அமைப்பினரின் ஆதிக்கம் நிறைந்த மேற்கு பகுதியிலேயே நடைபெற்றிருக்கிறது. எனவே அவர்களுக்கு தொடர்பு இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது" என்றார்.
பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு ஐ.பி.எஸ் அதிகாரி கூறுகையில், "சாம்பாஜி பிரிகேட் அமைப்பினர் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்றார்.
மகாராஷ்டிரத்தில் கடந்த வாரம் மராட்டிய மன்னர் சிவாஜி, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே, அம்பேத்கர் ஆகியோரை இழிவுப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக்கில் சில படங்கள் கசியவிடப்பட்டன.
ஆட்சேபணைக்குரிய படங்களை சிலர் ஃபேஸ்புக்கில் பரப்பியதால் மகாரஷ்டிராவில் மீண்டும் வன்முறை வெடித்தது.
கடந்த 2004 ஜனவரியில், பந்தர்கர் ஓரியண்டல் ஆய்வு மையம் தாக்கப்பட்டதாக சாம்பாஜி பிரிகேட் மீது வழக்கு உள்ளது. இந்த ஆய்வு மையத்தைச் சேர்ந்த அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் மராட்டிய மன்னர் சிவாஜி குறித்து வெளியிட்ட தகவல்களுக்கு கண்டனம் தெரிவித்து தாக்குதல் நடத்தப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.