

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 10-ம் தேதி விசாரணைக்கு நேரில் அஜராகும்படி அந்த உத்தரவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 6-வது துணை குற்றப்பத்திரிகையில் நளினி சிதம்பரத்தின் பெயரை சிபிஐ சேர்த்தது. அவரை குற்றவாளியாகவோ அல்லது சாட்சியாகவோ சேர்க்கவில்லை. ஆனால் மோசடி தொடர்பாக சில முக்கிய தகவல்களை அறிந்தவர் என்ற அடிப்படையில் அவரை சிபிஐ சேர்த்துள்ளது.
கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா சிட்பண்ட் நிறுவனம் பொதுமக்களின் பல ஆயிரம் கோடி பணத்தை மோசடி செய்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.