

பெலகாவி: கர்நாடகாவில் மதமாற்ற தடைச் சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தவர்களும், ஏழைகளும் அதிகளவில் மதமாற்றம் செய்யப் படுவதாக புகார் எழுந்தது. கட்டாய மதமாற்ற புகாரில் கிறிஸ்தவ பாதிரியார்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகளில் மதம் மாறியவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு கர்நாடக அரசு உத்தவிட்டது. இதைத் தொடர்ந்து கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர முடி வெடுக்கப்பட்டது.
இதற்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. கர்நாடகாவைச் சேர்ந்த பேராயர்கள், மதத் தலைவர்கள் முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து இந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என கோரிக்கை விடுத்தனர். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
எனினும் பெலகாவியில் நடந்து வரும் கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்ற தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகாவில் பல இடங்களில் கிறிஸ்தவ அமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த மசோதா இன்று கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த மசோதா உண்மையில் 2016 ஆம் ஆண்டு சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டதாக மாநில சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி கூறினார்.
ஆனால் 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வரைவு மசோதா, தற்போதைய பாஜக அரசு கொண்டு வந்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டினார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேசுகையில் ‘‘எஸ்சி, எஸ்டி மக்களின் நிலைமை எங்களுக்குத் தெரியும். அவர்கள் புறக்கணிக்கப்பட்டு பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எஸ்சி, எஸ்டி சமூகங்கள் மற்றும் பெண்களைப் பாதுகாப்பதே இந்த மசோதாவைக் கொண்டு வந்ததன் நோக்கம்’’என்றார்.
விவாதத்தின் போது கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா பேசுகையில், ‘‘நாங்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ்ல் இருந்து வந்தவர்கள். இந்த நாட்டை, மதம், கலாச்சாரத்தை காப்பாற்ற ஆர்எஸ்எஸ் கற்றுக் கொடுத்தது. அதனால்தான் இதை செய்கிறோம்’’ எனக் கூறினார்.