

பஞ்சாபில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என லூதியானா காவல்துறை ஆணையர் குர்பிரீத் புல்லர் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நீதிமன்றத்தில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காயமடைந்தவர்களில் ஒருவர் வழக்கறிஞர் ஆர்எஸ் மாண்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நாசவேலையா என பஞ்சாப் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என லூதியானா காவல்துறை ஆணையர் குர்பிரீத் புல்லர் தெரிவித்தார்.
உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் கழிவறையின் உள்ளே இருந்த அடையாளம் தெரிய நபர் வெடிகுண்டை வைத்திருந்திருக்கலாம், நாங்கள் விசாரித்து வருகிறோம் என புல்லர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் இரண்டு மரணங்கள் சம்பவ இடத்திலிருந்து பதிவாகியிருந்தாலும், வெடிப்பில் ஒரு மரணத்தை போலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தேர்தலுக்கு முன்னதாக நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குண்டுவெடிப்புக்கு பின்னால் தேச விரோத சக்திகள் இருப்பதாக முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி குற்றம் சாட்டியுள்ளார். சம்பவ இடத்தை பார்வையிட்ட பஞ்சாப் முதல்வர் சரண்ஜித், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.
பஞ்சாப் குண்டுவெடிப்பு பின்னணியில் வெளிச் சக்திகளின் சாத்தியக்கூறு உட்பட எதையும் நிராகரிக்க முடியாது, மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது என பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா கூறினார்.
பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா கூறியதாவது:
‘‘பஞ்சாப் எல்லையோர மாநிலம். எனவே பஞ்சாப் நிலையாக இருப்பதை சில சக்திகள் ஒருபோதும் விரும்புவதில்லை. தடயவியல் குழு வந்துள்ளது, விசாரணை நடைபெறுகிறது. வெளிச் சக்திகளின் சாத்தியக்கூறு உட்பட பின்னணி எதையும் நிராகரிக்க முடியாது. மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது’’