

மும்பை: "எதிர்பாலின நட்பு, அதாவது பெண் தோழி என்றாலே உடற்பசியை, காமத்தை தீர்க்க இருப்பவர் கிடையாது" என்று கண்டனம் தெரிவித்த மும்பை போக்ஸோ நீதிமன்றம், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர், சிறுமியின் வாழ்க்கையைச் சிதைத்துவிட்டார், அவரின் வாழ்க்கையை தொடக்கத்திலேயே அழித்துவிட்டார் என்று நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
20 வயது இளைஞர் தனது தூரத்து உறவினரின் மகளான 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு மும்பை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த நிலையில், நீதிபதி ப்ரீத்தி குமார் குலே தீர்ப்பளித்தார்.
அந்தத் தீர்ப்பில் அவர் கூறியதாவது: "ஒருவருக்கு பெண் தோழி அல்லது எதிர்பாலின நண்பர் இருந்தாலே அவர் தனது பாலியல் இச்சையை, காமத்தை, உடற்பசியை தீர்த்துக்கொள்ள இருப்பவர் என அர்த்தம் அல்ல. இந்த வழக்கில் நீதிமன்றம் இளைஞருக்கு வழங்கும் தண்டனை என்பது இந்த வயதில் உள்ள இன்றைய இளைஞர்களுக்கு ஒரு செய்தியை வழங்கிட வேண்டும்.
காமத்தை, உடற்பசியை தீர்த்துக்கொள்ள கட்டுப்பாடற்ற ஆசை என்பது அவர்களின் எதிர்காலம், தொழில், வாழ்க்கையில் வளர்ச்சிக்கான பொன்னான காலத்தை அழித்துவிடும்.
எதிர்கால முன்னேற்றத்தின் அடித்தளம் பாலின வேறுபாடின்றி இளைஞர்களின் தொடக்க நாட்களில் இருக்கிறது. இந்த வழக்கில் குற்றவாளி செய்த குற்றத்தால் குற்றம் செய்த இளைஞரின் எதிர்காலமும், பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்காலமும் இருளின் நிழலில் இருக்கிறது.
இந்த வழக்கில் குற்றவாளிக்கு அதிகபட்சமான தண்டனை வழங்க வேண்டிய அவசியமில்லை. அந்த இளைஞர் தான் செய்த குற்றத்தின் தன்மை என்ன என்பதையும், அதன் விளைவு என்ன என்பதையும் புரிந்துகொண்டார், மீண்டும் இந்தக் குற்றத்தைச் செய்ய்யமாட்டார். குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறேன். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட சட்ட சேவை ஆணையம் மூலம் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.