

சண்டிகர்: ஹரியாணா மாநிலத்தில் மது அருந்த வயது வரம்பு 25 லிருந்து 21ஆகக் குறைத்து சட்டப்பேரவையில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதன்கிழமை இதற்கான மசோதாவை ஹரியாணா கலால் மற்றும் வரித்துறைக்கான அமைச்சகப் பொறுப்பை ஏற்றுள்ள துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதற்கான விவாதங்களும் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றன.
ஹரியாணாவின் 2021-22 ஆம் ஆண்டுக்கான கலால் வரிக் கொள்கையை உருவாக்கும் நேரத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா தாக்கல் புதிய மசோதாவில், ''கலால் சட்டத்தில் முந்தைய விதிகள் இணைக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றைக்கு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சமூகப் பொருளாதார நிலைமைகள் வெகுவாக மாறிவிட்டன. மக்கள் இப்போது கல்வியறிவு பெற்றவர்களாகவும், புதிய முயற்சிகளில் பங்கேற்பவர்களாகவும் உள்ளனர், மேலும் குடிப்பழக்கம் குறித்து பகுத்தறிந்து பொறுப்பாக முடிவெடுக்கக்கூடிய நிலையில் அவர்கள் உள்ளனர்'' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஹரியாணா சட்டப்பேரவையில் இம்மசோதா மீது விவாதம் நடைபெற்றது. இதில் டெல்லி உட்பட பல மாநிலங்கள் சமீபத்தில் மது அருந்துவதற்கான வயது வரம்பை ஒரேமாதியாக 21வயது எனறு நிர்ணயிக்கப்பட்டதை சுட்டிக்காட்டப்பட்டது. மற்ற மாநிலங்களில் 21 வயது என்ற ஒரே மாதிரியான வயதுவரம்பு நிர்ணயிககப்பட்டுள்ளதையே பின்பற்றலாம் எனவும் பேசப்பட்டது. பின்னர், ஒருமனதாக 'ஹரியாணா கலால் (திருத்த) மசோதா, 2021' மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
டெல்லி சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் மதுபானம் அருந்துவோர் அல்லது கடைகளில் விற்கப்படும் மதுபானத்தை வாங்குவோருக்கான வயது வரம்பை அல்லது சட்டப்பூர்வ வயதை தற்போதுள்ள 25 வயதில் இருந்து 21 ஆக குறைக்க வழி வகுத்தது.
ஹரியாணா சட்டப்பேரவையில் கலால் வரி உள்ளிட்ட 6 மசோதாக்கள் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டன.