கர்நாடகாவில் தேவாலயம் மீது தாக்குதல்

கர்நாடகாவில் தேவாலயம் மீது தாக்குதல்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழலில் தெற்கு கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் தேவாலயம் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தவர்களும், ஏழைகளும் அதிகளவில் மதமாற்றம் செய்யப் படுவதாக புகார் எழுந்தது. கட்டாய மதமாற்ற புகாரில் கிறிஸ்தவ பாதிரியார்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகளில் மதம் மாறியவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு கர்நாடக அரசு உத்தவிட்டது. இதைத் தொடர்ந்து கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர முடி வெடுக்கப்பட்டது.

இதற்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. கர்நாடகாவைச் சேர்ந்த பேராயர்கள், மதத் தலைவர்கள் முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து இந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என கோரிக்கை விடுத்தனர். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எனினும் கர்நாடக சட்டப்பேரவையில் மதமாற்ற தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பெலகாவியில் நடந்து வரும் கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்ற தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகாவில் பல இடங்களில் கிறிஸ்தவ அமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் தெற்கு கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் தேவாலயம் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. 160 ஆண்டுகள் பழமையான புனித ஜோசப் தேவாலயத்தில் புனித அந்தோணியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. போலீஸார் சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவாலயத்தின் பாதிரியார் ஜோஸ்பே அந்தோணி டேனியல் கூறுகையில், ‘‘பெங்களூருவில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ள சூசைபால்யாவில் உள்ள தேவாலயம் இன்று சேதமடைந்துள்ளது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நாசவேலைகள் இதற்கு முன் நடந்ததில்லை’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in