

மும்பை: கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஷீனா போராவை பார்த்ததாககூறும் பெண், விரைவில் வாக்குமூலம் அளிப்பார் என்று இந்திராணி முகர்ஜியின் வழக்கறிஞர் சனா கான் தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஷீனா போரா கடந்த 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில், அவரது தாய் இந்திராணி முகர்ஜி ஷீனா போராவை கொலை செய்தது தெரியவந்தது. சொத்து தகராறில் இந்தக் கொலை நடந்திருப்பதாக சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கில் இந்திராணி முகர்ஜி, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் ஓட்டுநர் ஷ்யாம் ராய் ஆகியோர் 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். தற்போது இந்திராணி முகர்ஜி மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில், இந்திராணி முகர்ஜி அண்மையில் சிபிஐ இயக்குநருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தனது மகள் ஷீனா போராவை பார்த்ததாக பெண் அரசு அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திராணி முகர்ஜியின் வழக்கறிஞர் சனா கான் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஷீனா போராவை பார்த்ததாக கூறும் பெண், விரைவில் சிபிஐயிடம் வாக்குமூலம் அளிப்பார். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நேர்மையான விசாரணையை நடத்துமாறு மனு தாக்கல் செய்யவுள்ளோம்” என்றார்.