

ஆக்ராவின் பின்ஹாட் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் 52 நாட்களில் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
உ.பி. ஆக்ராவின் ஊரகப் பகுதி பின்ஹாட் காவல் நிலைய உதவி ஆய்வாளராக இருந்தவர் பிரோமத் குமார் சர்மா. அவர் பதவியேற்றது முதல் முதல் தன்னிடம் வந்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வந்தார். இதனால் பிரோமத்துக்கு பொதுமக்கள் செல்வாக்கு பெருகியது. புகாரளிக்க வரும் பொதுமக்களுக்கு நேரம் ஒதுக்கி காவல் நிலையத்தில் அமர வைத்து தேநீருடன் பிரச்சினைகளை கேட்கும் வழக்கம் கொண்டுள்ளார் பிரோமத்.
இந்நிலையில், ஆக்ரா மாவட்ட எஸ்எஸ்பி. சுதிர் குமார் சிங் உத்தரவின்படி, பிரோமத் நகரிலுள்ள ரக்கப்கன்ச் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்த பின்ஹாட் மக்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா செய்தனர். உதவி ஆய்வாளர் பிரோமத்தின் மாற்றுதல் உத்தரவை திரும்பப் பெறக் கோரினர். தர்ணாவுக்கு ஆதரவாக அப்பகுதிலுள்ள கடைகளும் அடைக்கப்பட்டன.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் உதவி ஆய்வாளர் பிரோமத் சர்மா கூறும்போது, ‘‘ஆக்ராவின் எஸ்எஸ்பி தமிழர் ஜி.முனிராஜ் அங்கிருந்து மாறு தலாகி லக்னோவுக்கு கிளம்பும் முன்பு என்னை பின்ஹாட்டில் பணியமர்த்தினார். அப்பணியில், பொதுமக்கள் ஆதரவு பெற்ற எனக்கு ரக்கப்கன்சிற்கு துறை ரீதியாக உடனடி மாற்றம் செய்திருப்பதை தவிர்க்க முடியாது. இதேபோல், அப்பகுதி மக்களுக்காகவும் பணியாற்றி நற்பெயர் எடுக்க முயல்வேன்’’ என்று தெரிவித்தார். பிரோமத் சர்மா தமது குடும்ப உறுப்பினரை போல் பின்ஹாட்டில் பணியாற்றியதாக பொதுமக்கள் பெருமைப்படுகின்றனர்.