

குருவாயூர்: மகிந்திரா கார் நிறுவனம் ‘மகிந்திரா தார்’ என்ற புதிய எஸ்யுவி காரை அறிமுகம் செய்துள்ளது. இதையொட்டி கேரளாவின் புகழ்பெற்ற குரு வாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு ஒரு காரை கடந்த 4-ம் தேதி காணிக்கையாக வழங்கியது.
இந்தக் காரை தேவஸ்வம் போர்டு ஏலம் விட்டது. குருவாயூரை சேர்ந்த சுபாஷ் பணிக்கர் என்பவர் ரூ.15 லட்சத்து 10 ஆயிரத்துக்கு காரை ஏலத்தில் எடுத்தார். பஹ்ரைனில் வசிக்கும் தனது என்ஆர்ஐ நண்பர் எர்ணாகுளத்தை சேர்ந்த அமல் முகம்மது அலி என்பவருக்காக காரை சுபாஷ் பணிக்கர் ஏலம் எடுத்திருந்தார்.
இந்நிலையில் காணிக்கையாக பெற்ற காரை வேற்று மதத்தை சேர்ந்தவருக்கு வழங்குவதற்கு ஒரு சில தேவஸ்வம் போர்டு உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். மேலும் சிலர், கோயிலின் தேவைக்காக காரை பயன்படுத்தலாம் என்று கூறினர். இதனால் கார் ஏலத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் காரை ஏலம் எடுத்த சுபாஷ் பணிக்கர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். காரை தன்னிடம் ஒப்படைக்காவிடில் நீதிமன்றம் செல்லப் போவதாக அவர் எச்சரித்தார்.
இதையடுத்து தேவஸ்வம் போர்டு உறுப்பினர்கள் கூட்டம் நேற்றுமுன்தினம் மீண்டும் நடை பெற்றது. அதன் தலைவர் கே.பி. மோகன்தாஸ் கூறும்போது, “கோயில் நிர்வாகத்தின் ஏல விதிப்படி தற்காலிக அனுமதி மட்டுமே ஏலம் எடுத்தவருக்கு கொடுத்தோம். அதை கோயில் நிர்வாக குழுவும் ஆணையரும் அங்கீகரிக்க வேண்டும். ஒரே ஒருவரை மட்டுமே கொண்டு ஏலம் விட்டது குறித்தும் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். எனினும் சட்ட நடைமுறை முடிந்த பிறகு காரை வழங்குவோம்” என்றார்.
காணிக்கையாக வழங்கிய கார் இவ்வாறு சர்ச்சையில் சிக்கும் என மகிந்திரா நிறுவனம் ஒருபோதும் நினைத்திருக்காது.