Published : 28 Jun 2014 11:05 AM
Last Updated : 28 Jun 2014 11:05 AM

அமைச்சரை விமர்சித்ததால் மாற்றல் முதல்வரிடம் தலைமை ஆசிரியை மனு

கேரளத்தில் மாநில கல்வி அமைச்சரை விமர்சித்ததற்காக தன்னை பணியிட மாற்றல் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு கோரிக்கை விடுத்துள்ளார் அரசு உயர் நிலைப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியை ஊர்மிளா தேவி.

மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. வி.சிவகுட்டியுடன் சென்று முதல்வரை வெள்ளிக்கிழமை சந்தித்த அவர் இது தொடர்பாக கோரிக்கை மனுவை கொடுத்தார்.

காட்டன்ஹில் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றியவர் ஊர்மிளா தேவி. பள்ளியில் நடந்த விழா ஒன்றுக்கு கல்வி அமைச்சர் பி.கே. அப்து ராப் தாமதமாக வந்தார் என்பதற்காக அவரை குறை கூறி பேசினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அமைச்சர் வேறு பள்ளிக்கூடத்துக்கு தலைமை ஆசிரியையை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில், சர்ச்சைக்கு தீர்வு காண முதல்வரை சந்தித்த ஊர்மிளா தேவி, தான் கூறிய கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, பள்ளி தலைமை ஆசிரியையின் கோரிக்கை பற்றி முதல்வருடன் ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ராப்.

இப்போது நிலைமை முற்றிலும் மாறி இருக்கிறது. முதல்வரை சந்தித்து வேண்டுகோள் விடுத்திருக்கிறார் என்றும் அவர் சொன்னார்.

தலைமை ஆசிரியை பணியிட மாற்றல் விவகாரம் கடந்த 3 நாளாக சட்டசபையில் எதிரொலித்தது. மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அவையை செயல்படவிடாமல் ரகளை செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x