

புதுடெல்லி: மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாக்களிப்பதை விரும்பாமல் 12 பேரை இடைநீக்கம் செய்தனர் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்டதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா வர்மா, ஆர். போரா, ராஜாமணி பாட்டீல், சையத் நசீர் ஹுசைன், அகிலேஷ் பிரசாத் சிங், சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டோலா டென் உள்ளிட்ட 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பிரச்சினை எழுப்பி உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் முடிவை திரும்பப் பெற வாய்ப்பில்லை என அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். அதேசமயம் மன்னிப்பு கேட்க முடியாது என எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டன.
இந்தநிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஒருநாள் முன்பாக இன்று முடிந்துக் கொள்ளப்பட்டது. தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்தநிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே குளிர்காலக் கூட்டத்தொடர் தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 12 எம்.பி.க்கள் இடைநீக்கத்துடன் தொடங்கியது. மழைக்கால கூட்டத்தொடரில் நடந்த சம்பவம் தொடர்பாக, குளிர்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முடிவு முற்றிலும் தவறானது. வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் மற்றும் பிற பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க விரும்பினோம். ஆனால் அவற்றை திசை திருப்பவே ஆளும் கட்சி முயன்றது.
மாநிலங்களவையில் எந்த விவாதமும் இல்லாமல் உடனடியாக மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாக இருந்தது. மாநிலங்களவையில் அவர்களுக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதாக்கள் மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாக்களிப்பதை அவர்கள் விரும்பவில்லை, எனவே அவர்கள் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் குறைக்க முடிவு செய்தனர். இதனால் தான் கூட்டத்தொடர் தொடங்கியவுடன் 12 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.