

ராஞ்சி: கும்பலாகச் சேர்ந்து ஒருவரை அடித்துக் கொலை செய்வதைத் தடுக்கும் வகையில் சட்ட மசோதாவைக் கொண்டுவந்து ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது. நாட்டிலேயே 3-வது மாநிலமாக கும்பல் கொலைக்கு எதிராக சட்ட மசோதாவை ஜார்கண்ட் அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கு முன் ராஜஸ்தான் அரசும், மேற்கு வங்க அரசும் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளன.
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசிநாள் அமர்வு நேற்று நடந்தது. அதில், வன்முறை மற்றும் கும்பல் கொலைத் தடுப்பு மசோதா 2021 என்ற பெயரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் ஒரு மணிநேரத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பேரவையில் பேசுகையில் “மாநிலத்தில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கு இடையே ஒற்றுமை, அமைதியான சூழல் உருவாகவே இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் இந்தச் சட்டத்தால் தண்டிக்கப்படுவர்” எனத் தெரிவித்தார்
ஜார்க்கண்ட் உள்துறை அமைச்சர் ஆலம்கிர் ஆலம் மசோதாவைத் தாக்கல் செய்து பேசுகையில் “ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் 53 கும்பல் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதி்க்கப்படும்.
கும்பல் கொலைக்கு சதித்திட்டம் தீட்டுவோர், உதவி செய்வோரும் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். சமூகத்தில் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், செய்திகளை பரப்புதல் போன்ற நடவடிக்கையிலும் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டாலும் ரூ.3 ஆண்டுகள் சிறையும், ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
கும்பல் கொலை, தாக்குதல் நடக்கலாம் என சந்தேகம்படும் அளவில் இருந்தால், அதை நடக்காமல் தடுக்க கூட்டத்தை தடை செய்ய மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு” எனத் தெரிவித்தார்
இந்த கும்பல் கொலை, தாக்குதலுக்கு எதிராகச் சட்டத்துக்கு எதிர்க்கட்சியான பாஜக எதிர்த்துள்ளது. சமூகத்தில் ஒரு சில பிரிவினரை திருப்திபடுத்தும் வகையில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்து, கும்பல் தாக்குதல் என்றால் என்பதற்கு விளக்கம் கேட்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பாஜக எம்எம்ஏ கேதார் ஹர்ஸா பேசுகையில் “இந்த சட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தும்போது கும்பல் தாக்குதல் சம்பவங்கள் நடக்கலாம் எனக் கூறி கூட்டத்துக்கு தடை விதிக்க வாய்ப்பு உண்டு” எனத் தெரிவித்தார். ஆனால், பாஜகவினரின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.