

கலிபோர்னியாவில் பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக ‘தெற்கு ஆசியா’ என்று குறிப்பிட முயற்சி செய்வதாக இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளது.
கலிபோர்னியா கல்வித்துறை இத்தகைய மாற்றங்களை பாடப்புத்தகத்தில் செய்ய பரிசீலித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மன்மோகன் வைத்தியா, “அமெரிக்க பாடப்புத்தகத்தில் ‘இந்தியா’வுக்கு பதிலாக ‘தெற்கு ஆசியா’ என்று குறிப்ப்பிடும் பரிந்துரைக்கு இந்து செயல்பாட்டாளர்கள் வெற்றிகரமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளதற்கு முதலில் அவர்களை வாழ்த்துகிறேன்.
இடதுசாரி கல்வியாளர்கள் இந்தியாவின் புகழ்மிக்க அடையாளத்திற்கு பங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். ஆனால் இதனை ‘இந்து கல்வி அறக்கட்டளை’முறியடித்துள்ளனர்.
இந்தியாவுக்கு என்று தனிப்பட்ட அடையாளம் உள்ளது, இது பாதுகாக்கப்பட வேண்டும். ஆகவே ‘தெற்கு ஆசியா’ என்று மாற்றுப் பெயர் கொடுப்பது தவறான விஷயம்.
இந்தியாவுக்கென்று புகழ்மிக்க நாகரிகம் உள்ளது, பண்பாட்டு வரலாறு உள்ளது, இது உலகம் முழுதும் பிரசித்தியானதே. எனவே இந்தியாவை அதன் அடையாளத்திலிருந்து நீக்குவது பெரும் தவறாகும். இந்து செயல்பாட்டாளர்கள் தெளிவாகவே இதனை எதிர்த்து முறியடித்துள்ளனர்” என்றார்.
இந்துக்கள் போராட்டத்தை அடுத்து கலிபோர்னியா கல்வித்துறை இந்த மாற்றங்களை தவிர்த்துள்ளது.