

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஒருநாள் முன்பாக இன்று முடிந்ததையடுத்து தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
டிசம்பர் 23-ம் தேதி (நாளை) வரை கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திடீரென ஒருநாள் முன்பாகவே கூட்டத்தொடர் முடிந்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 23-ம் தேதிவரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து லக்கிம்பூர் கெரி கலவரம், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவற்றை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து 12 எம்.பி.க்களை குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார்.
இதற்கிடையே, தேர்தல் சீர்திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் நேற்று விவாதம் நடந்தபோது, மசோதா ஆவணங்களைத் தூக்கி எறிந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரீக் ஓ பிரையன் அமளியில் ஈடுபட்டார். இதனால் கூட்டத்தொடர் முடியும் வரை அவரை சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் உத்தரவிட்டார்.
இதனால் இன்று காலை கூட்டத்தொடர் தொடங்கியது முதல் அவைக்குள் செல்லாமல் இருந்த டெரீக் ஓ பிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களுடன் இருந்தார்.
இந்தக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் முக்கிய மசோதாவாக, தேர்தல் திருத்த மசோதா, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது ஆகிய முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டார். இந்தக் கூட்டத்தொடரில் 18 அமர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகளின் அமளியால் 18 மணி நேரம் 48 நிமிடங்கள் வீணாகியுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவையை ஒத்திவைக்கும் முன் பேசுகையில், “அவை அதன் திறனுக்கும் குறைவாகக் கூட்டத்தை நடத்தியுள்ளது. எம்.பி.க்கள் அனைவரும் தங்களை சுயபரிசோதனை செய்து, இந்தக் கூட்டத்தொடர் எவ்வாறு வேறுபட்டு இருந்தது, சிறப்பாக இருந்தது என்று சிந்தியுங்கள். எனக்கு விமர்சனப் பார்வைதான் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.