

மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) சட்டப்பேரவைத் தலைவராக அக்கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி (56) ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக பொறுப்பேற்பது உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, பாஜகவும் பிடிபியும் இணைந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூட்டணி ஆட்சி அமைத்தன. இந்நிலையில், முதல்வர் முப்தி முகமது சையது உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி 7-ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது மகள் மெகபூபா புதிய முதல்வராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியானது. ஆனால், புதிய அரசு பொறுப்பேற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டதால் அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
புதிய அரசு அமைக்க பிடிபி புதிய நிபந்தனை விதிப்பதாகவும் அதை ஏற்க முடியாது என்றும் பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அதேநேரம் ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் ஆதரவளிக்க தயார் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிடிபி தலைவர் மெகபூபா கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு மெகபூபா செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிரதமருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. கட்சி எம்எல்ஏ.க்களுடன் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்” என்று கூறியிருந்தார்.
இதன்படி, ஸ்ரீநகரில் உள்ள மெகபூபாவின் இல்லத்தில் வியாழனன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் எம்எல்ஏ, எம்எல்சி, எம்பி.க்கள் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மீண்டும் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் மூத்த தலைவர் முசாபர் பெய்க் கூறும்போது, “பிடிபி கட்சியின் பேரவைத் தலைவராக மெகபூபா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் விரைவில் முதல்வராக பதிவியேற்றுக் கொள்வார்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் மெகபூபா கூறும்போது, “என் மீது நம்பிக்கை வைத்து கட்சியின் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. உங்கள் (கட்சியினர்) ஆதரவு இன்றி நான் இல்லை. கடந்த 3 மாதங்களாக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
இந்நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) தன்னை சந்திக்குமாறு பிடிபி மற்றும் பாஜக மாநில தலைவர்களுக்கு ஆளுநர் என்.என்.வோரா தனித்தனியாக அழைப்பு விடுத்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த இரு தலைவர்களுடன் புதிய அரசு அமைப்பது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
ஜம்மு காஷ்மீரில் பிடிபி கட்சியுடன் இணைந்து அரசு அமைப்பது தொடர்பாக, பாஜக எம்எல்ஏ.க்களுடன் அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநில பொறுப்பாளருமான ராம் மாதவ் வெள்ளிக்கிழமை ஜம்முவில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் கலந்துகொள்ள உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.