

புதுடெல்லி: தேசவிரோதி என்ற வார்த்தை சட்டத்தில் தெளிவாக விளக்கப்படவில்லை, வரையறுக்கப்படவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்தார்.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி, “தேசவிரோதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன, அதுகுறித்து சட்டத்தில் ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா, நடைமுறையில் இருக்கும் எந்தச் சட்டத்திலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதா?
கடந்த 3 ஆண்டுகளாக தேசவிரோத நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு மாநிலங்களில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரங்களையும் வெளியிட வேண்டும்'' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறுகையில், “தேசவிரோதி என்ற வார்த்தை சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்படவில்லை, விளக்கப்படவும் இல்லை.
அதேசமயம், நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும் சட்டவிரோத மற்றும் பதற்றத்தைத் தூண்டும் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கையாள்வதற்கு குற்றவியல் சட்டம் மற்றும் பல்வேறு நீதித்துறை தீர்ப்புகள் உள்ளன.
இதன்படி, அரசியலமைப்புச் சட்டம் 1976இல் 42-வது திருத்தத்தில் 31டி பிரிவில் அதாவது அவசரநிலை அமல்படுத்தப்பட்ட காலத்தில் தேசவிரோத நடவடிக்கை குறித்து வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது 1977-ம் ஆண்டு 43-வது திருத்தத்தில் அது நீக்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு, குறிப்பாக விசாரணை, வழக்குப் பதிவு மற்றும் குற்ற விசாரணை, ஒருவரின் உயிர் மற்றும் சொத்துகளைப் பாதுகாத்தல் போன்றவை மாநில அரசின் பொறுப்புக்குள் வரும். காவல்துறை, பொது அமைதி ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும். தேசவிரோத நடவடிக்கையில் மாநில அரசுகளால் கைது செய்யப்பட்ட விவரங்கள் குறித்து மத்திய அரசிடம் எந்த விவரங்களும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.