

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் முக்கிய ஆலோ சனை நடத்தினார்.
கடந்த 6-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்தியா, ரஷ்யா உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அப்போது ரூ.5,000 கோடி மதிப்பில் ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் நேற்று முன்தினம் முக்கிய ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
எனது நண்பர் அதிபர் புதினுடன் பேசினேன். அண்மையில் அவர் இந்தியாவுக்கு வந்திருந்தபோது முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோம். அதன் தொடர்ச்சியாக எங்களது ஆலோசனை அமைந்தது. இந்தியா, ரஷ்யா இடையிலான உறவை மேம்படுத்தும் வழிகள் குறித்து ஆலோசனைநடத்தினோம். குறிப்பாக உரங்களை விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். சர்வதேச நிலவரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கை: அண்மையில் இந்தியா சென்றிருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக பிரதமர் மோடிக்கு, அதிபர் புதின் நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகள் இடையிலானஒப்பந்தங்களை செயல்படுத்துவது குறித்து மோடியும் புதினும் ஆலோசனை நடத்தினர். ஆசிய, பசிபிக் பிராந்தியம் உட்பட சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பின்னர்புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.